பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

135


தளபதியின் நெஞ்சு சுபாவ நிலைக்கு வந்தது. இந்த நாராயணன் சேந்தன் நீடுழி வாழ்க! நான் குறட்டைவிட்டுத் துரங்கிக் கொண்டிருப்பதாக இவன் மட்டும் சொல்லியிராவிட்டால் மகாமண்டலேசுவரரின் சந்தேகம் இலேசில் அவரை விட்டு நீங்கியிருக்காது. சுரங்கப்பாதை முழுவதும் விளக்கோடு தேடி என்னைக் கண்டிருப்பார்!’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

இப்படி மகிழ்ந்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதே இன்னொரு சந்தேகமும் பீதியும் அவன் மனத்தில் கிளம்பி அவனைப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டன. இடையாற்றுமங்கலம் நம்பி முதலியவர்கள் இந்தப் பாதாள மண்டபத்திலிருந்து மேலே ஏறிப் போவதற்கு நீ நின்று கொண்டிருக்கும் இதே வழியாகத்தானே திரும்பி வருவார்கள்! அப்போது என்ன செய்வாய்? அதற்குள் நீ வந்த வழியே திரும்பி மேலே போகாவிட்டால் நிச்சயமாக அவர்கள் உன்னைப் பார்த்துவிடப் போகிறார்கள். நீ அவர்களிடம் நிச்சயம் அகப்பட்டுக்கொள்ளத்தான் போகிறாய் என்று தளபதி வல்லாள தேவனுடைய உள் மனம் அவனை எச்சரித்தது.

‘அடாடா ! இதுவரை இந்த யோசனையே நமக்கு ஏற்படவில்லையே. நான் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் திரும்பி வருவதற்குள் நான் மேலே ஏறிப்போய்விட வேண்டும்’ என்று எண்ணியவனாய்ப் பதுங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்தான் தளபதி வல்லாளதேவன்.

அவன் அப்படி எழுந்திருந்து திரும்புவதற்குத் தயாரான நிலையில், கடைசி முறையாக அவனுடைய விழிகள் பாதாள மண்டபத்துப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தன. அப்போது சிறிது நேரத்துக்கு முன் தன் மனம் எண்ணியதற்கு மாறாக அவர்கள் வேறோர் புதுப் பாதை வழியே மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.

அவன் நின்றுகொண்டிருந்த இடம் பாதாள மண்டபத்தின் கிழக்குக் கோடி மூலை. அந்த மூலையின் மேலே பளிங்கு