பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மேடையில் திருமகள் சிலைக்கருகே கொண்டு போய் விடும் சுரங்கப்பாதை ஆரம்பமாகிறது.

மறுபக்கம் மேற்குக்கோடி மூலையில் அதேபோல் ஒரு படிக்கட்டு சரிவாக மேலே நோக்கி ஏறிச் சென்றது. அந்தப் படியில் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் செல்ல, அவனுக்குப்பின் இடையாற்று மங்கலம் நம்பி, குமார பாண்டியர்போல் அவன் கண்களுக்குப் பிரமையளித்த துறவி, அவருக்கு அருகில் சிரித்துப்பேசிக் கொண்டு செல்லும் குழல்மொழி - ஆக நால்வரும் மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதைத் தளபதி வல்லாளதேவன் பார்த்தான்.

மேல்கோடியிலிருந்து உயரச் செல்லும் அந்தப் படிக்கட்டு வழி எங்கே கொண்டுபோய் விடுவதாயிருக்கும் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அந்த ஒரு கணத்தில் அவனுடைய மனம் முழுவதும் நிறைந்திருந்த ஆவல் ஒன்றே ஒன்றுதான். அங்குள்ள மர்மங்களையும் இரகசியங்களையும் ஒரேயடியாகப் புரிந்து கொண்டுவிட வேண்டுமென்ற ஆசை தான் அது.

அவர்கள் கண்பார்வைக்கு மறைகின்ற வரையில் பொறுத்திருந்து விட்டு அடக்க முடியாத ஆசையுடன் பாதாள மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி அப்போது அங்கே எதையும் பார்க்க முடியவில்லை. அங்கே இருந்த ஒரே ஒரு தீபத்தையும் நாராயணன் சேந்தன் போகும்போது மேலே எடுத்துக் கொண்டு போய் விட்டதனால் மண்டபம், அதிலிருந்து கிழக்கேயும் மேற்கேயும் செல்லும் வழிகள், யாவும் பழையபடி பயங்கர அந்தகாரப் போர்வையில் மூழ்கிவிட்டிருந்தன.

‘இந்த மகாமண்டலேசுவரர் மாளிகையில் வந்து என்னுடைய மூளையே குழம்பிப் போய்விட்டதா ? முன்யோசனையோ, விளைவோ தெரியாமலே ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டே போகிறேனே! பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக அல்லவா முடிந்து விட்டது? வெளியேறுவதற்கு வழிகூடத் தெரியாத மையிருட்டில் இந்த