பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

137


மண்டபத்துக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டேனே’ என்ற மனத்தவிப்புடன் இருட்டைத் துழாவினான் வல்லாளதேவன்.

ஒருமுறை அங்கே குவிந்திருந்த கேடயங்களின் குவியலில் மோதி நிலைகுலைந்து தடுமாறி விழுந்தான் அவன். அப்போது நூறு வெண்கலக் கடைகளில் ஆயிரமாயிரம் மத யானைகள் புகுந்து அமளி செய்தாற்போன்ற அவ்வளவு ஒளியும் எதிரொலியும் அங்கே உண்டாயின. தளபதி நடுங்கிப் போனான். இவ்வளவு பெரிய ஓசை மேலே இருப்பவர்களுக்குக் கேட்காமலா போகும்? அவன் மனக்கண்களுக்கு முன்னால் அவனாகவே ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தான்.

அந்த ஓசையைக் கேட்டு நாராயணன் சேந்தனும் எமகிங்கரர்களைப் போன்ற நாலைந்து வீரர்களும் கையில் உருவிய வாள்களோடு சுரங்கத்துக்குள் இறங்கி ஓடிவருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும், “ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. தெரியாமல் இதற்குள் இறங்கி வந்துவிட்டேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள். விட்டு விடுங்கள். தயவுசெய்து இது மகாமண்டலேசுவரருக்குத் தெரிய வேண்டாம்!” என்று நாராயணன் சேந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அபயக்குரலில் கெஞ்சுகிறான் அவன்.

குட்டைக் கரும் பேய்போல் குரூரமாகத் தன் பெரிய கண்களை விழித்துப் பார்க்கும் நாராயணன் சேந்தன், “அதெல்லாம் முடியாது! தளபதியாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்களை, அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இங்கிருந்து உயிரோடு தப்பவிடுகிற வழக்கம் எங்கள் மகாமண்டலேசுவரரிடம் கிடையவே கிடையாது!’ என்று நிர்த்தாட்சண்யமான கடுமை நிறைந்த குரலில் பதில் சொல்லுகிறான். இந்தக் கற்பனையை நினைக்கும்போதே பயமாக இருந்தது தளபதிக்கு.

அந்தப் பாதாள மண்டபத்தில் ஊசிநுனி இடமும் விடாமல் சுற்றிப் பார்த்து எல்லா மர்மங்களையும் தெரிந்து கொண்டு விட வேண்டுமென்று அவன் மனத்தில் பொங்கி