பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பாண்டிமாதேவி / முதல் பாகம்


வல்லாளதேவன், நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்திலிருந்து வழிமுறை வழிமுறையாக அறிவுப்பணி புரிந்துவரும் ஆசிரிய மரபில் வந்த அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக் கனிவாயர் முதலிய பிரமுகர்கள் மகாராணி யாரைப் பணிவன் புடன் எதிர்கொண்டு வரவேற்றனர்.

கன்னியாகுமரிக் கடலைக் காண வேண்டுமானால் பெளர்ணமி தினத்தின் மாலை நேரத்தில் காண வேண்டும். அன்று தற்செயலாக வாய்த்த ஒரு பெரும் வாய்பைப் போலப் பெளர்ணமியும் வாய்த்திருந்தது.

“மகாராணி ! இப்படி வாருங்கள்! உங்களுக்கு ஒர் அதிசயத்தைக் காட்டுகிறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் அதங்கோட்டாசிரியர். வானவன்மாதேவியையும் மற்றவர்களையும் கடலோரத்துப் பாறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கிழக்கிலும், மேற்கிலும் சுட்டிக் காட்டினார் அவர்.

மூன்று புறமும் நீல நெடுங்கடல் தரங்கங்கள் என்னும் கரங்கொட்டிப் பண்பாடும் அந்த இடத்தில் அவ்வற்புதக் காட்சியை மகாராணி அதற்கு முன் கண்டதில்லை. ஆசிரியப் பெருந்தகையே! இது என்ன விந்தை! இந்த இடத்தில் மட்டும் இரண்டு சூரியன்களா? என்று கிழக்கிலும் மேற்கிலும் தனித் தனியே கடலின் இரு கோடி விளிம்புகளிலும் தெரியும் இரண்டு ஒளி வட்டங்களைப் பார்த்துக் கொண்டே அதங்கோட்டாசிரியரை வியப்புடன் கேட்டார் அரசி.

அந்தக் கேள்வியைக் கேட்டு அதங்கோட்டாசிரியர் சிரித்தார்.

“மகாராணி! இவை இரு சூரியன்கள் அல்ல. ஒன்று சந்திரன்; மற்றொன்று சூரியன். பெளர்ணமி நாட்களில் மட்டும் குமரித்தாய் இந்த அற்புதக் காட்சியை முழு அழகோடு நமக்குக் காட்டுகிறாள். சந்திரோதயத்தையும், சூரியாஸ்தமனத்தையும் ஒரே சமயத்தில் இந்த இடத்தில் நின்று காணலாம். சக்கவரத்தி இங்கு வரும்போதெல்லாம் பெளர்ணமி நாளாகப் பர்த்துத்தான் வருவார். எத்தனை முறை பார்த்தாலும் இது அவருக்கு அலுக்காது"