பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

141

நிலா ஒளியில் மயன் சமைத்த வித்தியாதர உலகத்து. மணிமண்டபம் போலக் காட்சியளித்தது. அதற்குள் நுழைந்த வல்லாளதேவன் நடு மையத்தில் இருந்த அலங்காரக் கிருகத்துக்குள்ளேயிருந்து தீப ஒளி தெரிவதைக் கவனித்தான். து.ாபப் புகையின் நறுமணமும் காற்றில் கலந்து வந்தது. அவன் மெதுவாக நடந்து சென்று அலங்காரக் கிருகத்தில் பலகணி வழியே உள்ளே எட்டிப் பார்த்தான்.

பொன் தகடுகள் பதிக்கப்பெற்று ஒளி நிறைந்த முத்துச் சர விதானமும் பட்டு மெத்தையுமாக விளங்கிய சப்ரமஞ்சக்கட்டில் ஒன்றில் அந்த இளம் துறவி நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். தலைப்பக்கத்தில் வைரக்கற்கள் இழைத்த பிடியோடு கூடிய கவரி, ஆலவட்டம் தண்ணிர்க் குடம் முதலியன இருந்தன.

‘சந்நியாசிக்கு இவ்வளவு சுகம் கேட்கிறதா?’ என்று எண்ணிய தளபதி வல்லாளதேவனின் மனத்துக்கு அந்தத் துறவியைப் பற்றிப் பூரணமாக எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை.


16. கூற்றத் தலைவர் கூட்டம்

இருட்டில் திடீரென்று பின்புறமிருந்து யாரோ தன் கையை இறுக்கிப் பிடித்ததைக் கண்டு மகாராணி பயந்து கூச்சலிட்டுவிடுவதற்கிருந்தாள். “மகாராணி! நான்தான் பகவதி!” என்று பகவதி மெல்லக் கூறியதைக் கேட்ட பின்பே வானவன்மாதேவியின் அதிர்ச்சி நீங்கியது. தலைவிரி கோலமாக அழுதுகொண்டு நீராழி மண்டபத்துக்கருகே இருந்த பாழுங்கிணற்று விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த வானவன்மாதேவி சற்றும் எதிர்பாராத நிலையில் பகவதியை அங்கே கண்டதும் சிறிது நாணமடைந்து விட்டாள்.

“பெண்ணே! நீ எப்போது இங்கே வந்தாய்? நான் எழுந்திருந்து வந்தது உனக்கு எப்படித் தெரியும்? நீதான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாயே!” மகாராணியின் குரலில்