பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

பாண்டிமாதேவி / முதல் பாகம்


வெகு நேரம் அழுதுகொண்டிருந்ததைக் காட்டும் கரகரப்பு இருந்தது.

“தேவி! இன்றைக்கு உங்கள் மனநிலை சரியில்லை. இப்படி ஏதாவது செய்ய முற்படுவீர்கள் என்று எதிர்பார்த்தே உறங்காமல் இருந்தேன். என்னையும் மீறிக் கண்கள் சிறிது அயர்ந்துவிட்டேன். நான் விழித்துக் கொண்ட போது உங்களைப் படுக்கையில் காணவில்லை. எழுந்திருந்து ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீங்கள் பெரிய அநியாயத்தைச் செய்வதற்கு இருந்தீர்கள். இப்படிச் செய்யலாமா? தாயே! இந்தத் தென்பாண்டி நாட்டு மக்கள் மாமன்னரான பராந்தகச் சக்கரவர்த்தியை இழந்து விட்டார்கள். குமாரபாண்டியர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. மக்களெல்லாம் கைகூப்பி வணங்கத்தக்க, தென்பாண்டி மாதேவியாக கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறீர்கள். தாங்களும் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மாதிரிப் போக முயற்சி செய்தால் நாங்கள் யாரைத் தாயே கைகூப்பி வணங்கிப் பெருமைப்படுவோம்” என்று உருக்கமாகப் பேசினாள் பகவதி.

“குழந்தாய்! சாகத் துணிந்து விட்டவளுக்குச் சமுத்திரத்தின் ஆழத்தைப் பற்றி என்ன கவலை. மனத்தில் அளவற்ற வெறுப்பு ஏற்பட்டுவிட்டால் எதைச் செய்யவும் துணிவு வந்துவிடுகிறது. இதோ, இன்னும் சில நொடிப்போது நீ இங்கே வராமலிருந்தால் என்னுடைய துன்ப உடல்கூடு நாளை இந்தப் பாழுங்கிணற்றில் மிதந்துகொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் எவற்றை வேண்டுமானாலும் இவ்வுலகில் நம் விருப்பப்படியே செய்துகொண்டு போவதற்கு இடமில்லை. இறைவன் சித்தம் என்று ஒன்றிருக்கிறது. சாவதோ, பிழைப்பதோ அந்தச் சித்தப்படித்தான் நடக்கிறது. இதோ என் சொந்த அநுபவத்தைத்தான் பாரேன்! இன்று மாலையிலிருந்து நான் படும் கவலைக்களுக்கு ஒரு முடிவும் காண முடியாமல் இந்த முடிவுக்கு வந்தேன். நீ பின் தொடர்ந்து வந்து இதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் செய்துவிட்டாய்."