பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

13


காலஞ்சென்ற கணவரைப்பற்றிய பேச்சைக் கேட்க நேர்ந்ததும் மகராணியாருக்குக் கண் கலங்கி விட்டது. அதங்கோட்டாசிரியர் உதட்டைக் கடித்துக் கொண்டார். பேச்சுப் போக்கில் தாம் செய்த தவறு அவருக்குப் புரிந்து விட்டது.

“அடாடா, மகாராணியாருக்கு வருத்தத்தை நினைவு கூறும்படியான விதத்தில் அல்லவா சக்கரவர்த்தியைப்பற்றி ஞாபகப்படுத்தி விட்டேன்; என்னை மன்னிக்கவேண்டும்” என்று அவர் மெல்லிய குரலில் கூறினார்.

வானவன்மாதேவி கண்களைத் துடைத்துக்கொண்டார். மறுபடியும் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார். அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் மற்றொரு அதிசயக் காட்சியைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.

எந்தப் பாறையில் நின்று மகாராணியாரும், மற்றவர்களும் கடலில் தென்பட்ட அதிசயத்தை நோக்கிக் கொண்டிருந்தார்களோ, அதன் வடமேற்கு மூலையில் மாட்டுக்கொம்பு போலக் கீழே விரிந்து மேலே துணிகள் ஒன்று கூடும் பாறைகள் இரண்டு இருந்தன. அந்தப் பாறைகளின் முக்கோண வடிவான இடைவெளியில் இரண்டு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன. பாறையின் மேல் நின்ற மற்றவர்களுக்கு அது கண் பார்வையிலே பட்டிருக்க முடியாது. பாறையின் உயர்ந்த இடம் எதுவோ, அதில் வல்லாளதேவன் நின்று கொண்டிருந்ததனால் தற்செயலாக அது அவன் பார்வையில் பட்டது. தங்களோடு வந்திருந்த பரிவாரத்தைச் சேர்ந்த வீரர்க்ளில் யாராவது இருவர் கடற்காட்சியை வேடிக்கைப் பார்ப்பதற்காக இறங்கிப்போய் அந்தப் பாறை இடுக்கில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற இயல்பான எண்ணம் தளபதிக்கு உண்டாயிற்று. ‘பரிவாரத்து வீரர்கள் கோவில் வாசலிலேயே தங்கிவிட்டார்களே! தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே?’ என்ற ஐயம் மெல்ல அவன் மனத்தில் எழுந்தது. ‘தான், அதங்கோட்டாசிரியர், மகாராணியார், பவழக்கனிவாயர்,