பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

பாண்டிமாதேவி / முதல் பாகம்


கொண்டிருக்கிறான்?” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமி! நேற்றிரவு நான் விருந்து மண்டபத்துக்குப் படுத்துக்கொள்ளச் சென்றபோது கூடத் தளபதி அங்கேதான் உறங்கிக்கொண்டிருந்தார். நான் சென்றதும் விழித்துக் கொண்டு சிறிதுநேரம் என்னோடு பேசிக்கொண்டும் இருந்தார். இப்போது காலையில் எழுந்திருந்து பார்த்தால் ஆளைக் காணவில்லை” என்று மூச்சுவிடாமல் பதற்றத்தோடு தான் சொல்ல வந்த செய்தியைக் கூறி முடித்தான் நாராயணன் சேந்தன்.

இடையாற்று மங்கலம் நம்பி அதைக் கேட்டுச் சிறிதும் திகைப்படையவில்லை. “ஏன் இவ்வளவு பதறுகிறாய், சேந்தா? பக்கத்தில் எங்கேயாவது எழுந்திருந்து போயிருப்பான். சிறிது நேரத்தில் தானாக வந்துவிடுவான். இன்றைக்கு மகாசபை கூடுகிறது. கோட்டைக்குப் போகவேண்டும். இருவரும் இங்கிருந்து புறப்பட்டுச் சேர்ந்தே போகலாம் என்று அவனிடம் நேற்றிரவே நான் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அவன் என்னிடம் சொல்லாமல் போவானா?” என்றார்.

“இல்லை, சுவாe! அநேகமான இடையாற்று மங்கலம் தீவு முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன். கால் கடுக்கச் சுற்றியாகி விட்டது. காலையில் எழுந்ததிலிருந்து இதே வேலைதான். ஆனால் அந்த மனிதரைக் காணவில்லை. மாளிகைக்குள் இருந்தால்தான் உண்டு. ஆனால் இங்கும் அவர் இல்லையென்று தெரிகின்றது.”

“சேந்தா! தளபதி எப்படிப் போயிருக்க முடியும் ? என்னிடம் அவ்வளவு உறுதியாகச் சொல்லிருந்தவன் போவானா ? எதற்கும் நீ படகோட்டி அம்பலவன் வேளானுடைய குடிசைக்குப் போய்க் காலையில் யாருக்காவது அவன் படகு செலுத்திக் கொண்டுபோனானா என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டு வா. பறளியாற்றில் தண்ணிர் அதிகமாகப் போய்க்கொண்டிருப்பதனால் அம்பலவன் வேளானின் உதவியில்லாமல் யாரும் அக் கரைக்குச் சென்றிருக்க முடியாது."