பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சொல்மாரி பொழிந்தார் பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள்.

“அது சரி, ஐயா, தளபதி என்று ஒருவர் மகா சேனாதிபதிப் பட்டம் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே! அவருக்குக் கண் அவிந்து போயிற்றா? அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துக்கள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா? இப்படிப்பட்ட சமயங்களில்கூட உதவி செய்யமுடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள்?’ என்று பொன் மானைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் தம்முடைய மனக் கொதிப்புப் புலப்படும்படி பேசினார்.

“காணாமற்போன குமார சக்ரவர்த்தியைத் தேடுவதற்காக இதுவரை மகாமண்டலேசுவரரோ, தளபதியோ ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா? பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்யமுடியும்? இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. இன்றையக் கூட்டத்தில் இதைப்பற்றி யெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்!”- என்று தம்முடைய கருத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும் எடுத்துக் கூறினார் அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார்.

“இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால் மகாராணி மனம் நொந்து விரக்தியடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகாராணி வானவன்மாதேவி இந்த நாட்டில் கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவர்கள். அவர் மனம் கலங்குமாறு செய்வது நம்முடைய பெருந்தன்மைக்கே இழுக்கு” என்று உணர்ச்சி நிறைந்த உருக்கமான குரலில் மீண்டும் அழுத்திக் கூறினார் முதலில் பேச்சைத் தொடங்கிய நன்கனிநாதர்.