பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பாண்டிமாதேவி / முதல் பாகம்


நடந்ததால் பாறைகளில் இடித்து முழங்காலில் இரத்தம் கசிந்தது.

இடுப்பிலிருந்த உடைவாளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஏறி, முன்பு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்த பாறையின் இடைவெளியில் குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை.

இதென்ன! மாயமா? மந்திரமா? இவ்வளவு வேகமாக அந்த உருவங்கள் எப்படி வெளியேறியிருக்க முடியும்? ஒருவேளை அவை பொய்த் தோற்றமாக நம்முடைய கண்களுக்கு மட்டும் தெரிந்த பிரமையா? என்று எண்ணிக் கொண்டே மற்றொரு வழியாகக் கீழே செல்லும் பாதையில் வேகமாக நடந்தான். இரண்டு மூன்று அடிகளே நடந்திருப்பான்; வழியின் திருப்பத்திலிருந்து இருபுறமும் இரண்டு வாள் துணிகள் பாய்ந்து நீண்டன!


2. ஆலயத்தில் ஆபத்து

ஆலயத்து வாசலில் மகாராணி வானவன்மாதேவி யாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது வேறு இரண்டு புதிய பெண்கள் அங்கே பல்லக்கு மூலமாக வந்து சேர்ந்தனர். இந்தக் கதையின் எதிர்கால நிகழ்ச்சிகளில் எத்தனையோ பல மாறுதல்களை உண்டாக்கப் போகும் அழகும் இளமையும் நிறைந்த அந்தப் பெண்மணிகளை இங்கேயே நேயர்களுக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டியது அவசியம்தான். தரைப் பிரதேசத்தின் முடிவிடமாகிய அந்தக் கன்னியாகுமரிக் கோவில் முன்றிலில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மூன்று பெரிய சாலைகள் திரிசூலத்தின் நுனியைப் போல வந்து ஒன்று கூடின.