பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. மண்டபத்தின் நான்கு புறமும் கண்களைச் செலுத்திச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர்.

“இதென்ன? இந்த மண்டபத்தில் ஏற்கெனவே காற்றுக் குறைந்து புழுக்கமாக இருக்கிறது. இந்தப் பட்டுத் திரைகள் எதற்கு? இவற்றை அகற்றி விடுங்கள்” என்று அங்கு நின்றிருந்த மெய்க்காப்பாளர்களை நோக்கித் திடீரென்று ஒரு கட்டளை பிறப்பித்தார் அவர். அப்போது திரைக்குப் பின்னால் யாரோ அவசரமாக நடந்து செல்லும் ஒலி கேட்டது.


21. சேந்தன் செய்த சூழ்ச்சி

பறளியாற்று வெள்ளம் காரணமாகச் சுற்று வழியில் அரண்மனைக்குப் புறப்பட்டிருந்த சேந்தனும், தளபதியும் திருநந்திக் கரையை அடையும்போது ஏறக்குறைய நடுப்பகல் ஆகிவிட்டது. வல்லாளதேவனின் உடல்தான் குதிரைமேல் திருநந்திக் கரைச் சாலையில் சென்று கொண்டிருந்ததே யொழிய உள்ளம் முழுதும் அரண்மனையில் நடந்துகொண்டிருக்கும் கூற்றத் தலைவர் கூட்டத்தில் லயித்திருந்தது.

‘அடாடா! இந்தப் பாழாய்போன பறளியாற்று வெள்ளம் நம்முடைய திட்டத்தையே மாற்றிவிட்டதே? இன்னுமா அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்தைத் தொடங்காமல் இருக்கப் போகிறார்கள்? நேர்வழியாகப் புறப்பட்டுப் போயிருந்தால் இதற்குள் நாமும் ஒழுங்காக அரண்மனைக்குப் போய்க் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். நாம் போகவில்லை என்பதற்காகக் கூட்டம் நின்று விடவா போகிறது? நமக்குத்தான் பல விதத்தில் நஷ்டம் ! இப்போதுள்ள தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலையில் மாறுதலைச் செய்வதற்கான முக்கியமான பல செய்திகளைக் கூட்டத்தில் விவாதித்திருப்பார்கள். போய்க் கலந்து கொண்டிருந்தால் கூற்றத் தலைவர்களும், மகாமண்டலேசுவரரும் எந்த நோக்கத்தில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று தெரிந்து