பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தளபதி குதிரையிலிருந்து இறங்கிச் சமணப்பள்ளியினுள் நுழைந்தான். அங்கே உட்புறம் உட்கார்ந்து ஏதோ பழைய சுவடியைப் படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்ததுறவி ஒருவர் அவனைப் புன்முறுவல் செய்து வரவேற்றார். அவனுடைய தோற்றத்தையும், உடைகளையும் பார்த்தவுடனேயே அவன் பெரிய பதவியிலுள்ளவனாக இருக்கவேண்டுமென்பதை அந்தச் சமணத் துறவி தெரிந்து கொண்டார்.

“வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அன்புடனே விசாரித்தார் அவர்.

“சுவாமி ! தாகம் அதிகமாயிருக்கிறது. பருகுவதற்குக் கொஞ்சம் தண்ணிர் வேண்டும்” என்றான் வல்லாளதேவன். துறவி எழுந்து சென்று அவனுக்குத் தண்ணிர் கொண்டு வந்து கொடுத்தார். அவன் வேண்டிய மட்டும் பருகித் தாகத்தைத் தணித்துக் கொண்டான். ‘வெகு தூரம் பிரயாணம் செய்து அலுப்படைந்தவர் போல் தென்படுகிறீர்கள். இப்படிச் சிறிது படுத்திருந்து பிரயாணக் களைப்புத்தீர ஒய்வு எடுத்துக் கொள்ளுங்களேன்” என்று பரிவாக உபசரித்தார் அந்தத் துறவி.

“இல்லை. நான் அவசரமாகப் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும். தங்க நேரமில்லை” என்று அவன் கூறவும் வியப்புடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த துறவி, “அடாடா ! இவ்வளவு துரம் வீணாக அலைந்திருக்கிறீர்களே அரண்மனைக்குச் செல்லப் பறளியாற்றின் கரையை ஒட்டினாற் போலக் குறுக்குச் சாலை ஒன்று செல்கிறதே. அதன் வழியாகப் போயிருந்தால் இதற்குள் அரண்மனை போய்ச் சேர்ந்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு இவ்வளவு தொலைவு அலைந்திருக்கிறீர்களே?” என்றார்.

“சுவாe! அந்த வழி எனக்கும் தெரியும்! ஆனால் பறளியாற்றில் வெள்ளம் வந்து நேற்று இரவே அந்தக் குறுக்கு வழியெல்லாம் உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாமே? அதனால்தான் சுற்று வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நானும் என் நண்பனும் இப்படி வந்தோம்."