பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

181


“அப்படியா! அந்த வழியை வெள்ளம் உடைத்துக் கொண்டு போய் விட்டதென்று உங்களுக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?” என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

“ஏன்? என்னுடன் பிரயாணம் செய்யும் ஒரு நண்பன் தான் சொன்னான்.”

“நான் இன்று காலையில்தானே அதே பாதையாக இங்கு வந்து சேர்ந்தேன் பறளியாற்றில் வெள்ளம் போவது உண்மைதான். ஆனால் பாதை உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாக உங்கள் நண்பன் சொல்லியிருந்தால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.”

து.ாய்மை திகழும் அந்தத் துறவியின் முகத்தைப் பார்த்த போது அவர் கூறுவது பொய்யாக இருக்களது என்று தோன்றியது அவனுக்கு திடீரென்று தளபதியின் சந்தேகம் கோபம், எல்லாம் நாராயணன் சேந்தன்மேல் திரும்பின. அவன் எதற்காகவோ, தன்னிடம் பொய் சொல்லித் தன்னைச் சுற்றி வளைத்து இழுத்தடிப்பதாகத் தோன்றியது. “சுவாமீ! ஒரு வேளை நீங்கள் வரும்போது ஆற்றில் வெள்ளம் குறைவாக இருந்திருக்கலாம். அதன் பின்பு அதிகமாகிச் சாலைகளை மூழ்கச் செய்திருக்கலாம் அல்லவா?’ என்று தன் சந்தேகத்தை உறுதி செய்துகொள்வதற்காக மறுபடியும் கேட்டான் தளபதி, அவர் கலகலவென்று சிரித்தார். “ஐயா! நீங்கள் சிந்தனை உணர்வே இன்றிக் கேள்வி கேட்கின்றீர்கள். நான் இங்கு வந்து சில நாழிகைப்போதுக்கு மேல் ஆகியிருக்காது. பறளியாறு மிகவும் பள்ளமான இடத்தில் ஓடுகிறது. அரண்மனைக்குச் செல்லும் சாலையோ கரைமேல் மலைச்சிகரம் போல் மேடான இடத்தில் போகிறது. என்னதான் வெள்ளம் வரட்டுமே, இந்தச் சில நாழிகை நேரத்தில் சாலைகளெல்லாம் அழிந்து மூழ்கியிருக்க முடியுமென்பதை என்னால் நம்பமுடியவில்லை.”

நிதானமாகச் சிந்தித்தபோது அவர் கூறுவது நியாயமாகவே பட்டது. அவனுக்கு. தன் உணர்ச்சிகளையோ, கோபதாபங்களையோ அங்கே அந்தத் துறவிக்குமுன் வெளிக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். “சரி! நான் வருகிறேன்