பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சுவாமீ! இவ்வளவு தொலைவு அலைந்தது அலைந்தாயிற்று. இனி எந்த வழியாகப் போனால் என்ன?” என்று அவரிடம் வணங்கி விடைபெற்றுக் கொண்டான்.

‘இந்த ஊர் எல்லை கடக்கிறவரை நாராயணன் சேந்தனிடம் எதுவும் கேட்கக்கூடாது. எல்லை கடந்தவுடன் அந்தத் திருட்டுக் குள்ளநரியைக் குதிரையிலிருந்து கீழே பிடித்துத் தள்ளி இரண்டு கன்னங்களிலும் பூசைக்காப்புக் கொடுத்து, ஏனடா நாயே! என்னைப் பொய் சொல்லியா ஏமாற்றினாய்? என்று கேட்கவேண்டும்! இவ்வாறு மனக் கொதிப்புடன் எண்ணிக் கொண்டே திருநந்திக்கரைச் சமணப் பெரும் பள்ளியிலிருந்து வெளிவந்தான் தளபதி வல்லாளதேவன். படிகளில் இறங்கித் தெருவைப் பார்த்ததும் அவனுக்குப் பகீரென்றது. அங்கே நாராயணன் சேந்தன் இல்லை. நிறுத்திவிட்டுப் போயிருந்த தளபதியின் குதிரையும் இல்லை. வல்லாளதேவன் திகைத்தான். ஒரு விநாடி அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நெற்றி சுருங்கியது. புருவங்கள் வளைந்தன, விழிகள் சிவந்தன! தோள்கள் விம்மிப் புடைத்தெழுந்தன. வார்த்தைகளில் அடக்கி விவரிக்க முடியாத ஆத்திரம் அவனுள் குமுறியது. சேந்தன் தன்னை வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் திட்டமிட்டு முட்டாளாக்கிவிட்டது போல் இருந்தது அவனுக்கு. தான் அன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ள அரண்மனைக்கு உரிய நேரத்தில் போய்விடாமல் தடுத்து அலைக்கழிக்கவே சேந்தன் தொடக்கத்திலிருந்து சூழ்ச்சி புரிந்து வந்திருக்கிறான் என்பதும் அவனுக்கு ஒருவாறு புரிந்தது. அப்போது மட்டும் தப்பித் தவறி நாராயணன் சேந்தன் அவனுக்கு முன்னால் அகப்பட்டிருந்தால் பழிபாவம் வந்தாலும் பரவாயில்லை என்று கொலை செய்வதற்குக் கூடத் துணிந்திருப்பான் அவன்.

சேந்தன் எந்தப் பக்கமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான்? எப்போது போனான்? என்று அக்கம் பக்கத்தில் யாரிடமாவது விசாரிக்கலாமென்று எண்ணி யவனாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தான் தளபதி.