பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

183


சமணப் பள்ளியின் வாயிற்புறத்து மேடையில் இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தி பூ விற்றுக்கொண்டிருந்தாள். அவள் கையில் பூக்கூடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கையிலே பூமாலை ஒன்றை வைத்துக் கொண்டிருந்தாள். கூடையில் ஆம்பல், தாமரை, மல்லிகை, முல்லை, சண்பகம், கோங்கு, வேங்கை முதலிய பல நிறங்களையும், பலவகையையும் சேர்ந்த புது மலர்கள் குவிந்திருந்தன. தான் தண்ணிர் குடிப்பதற்காகச் சமணப் பள்ளிக்குள் நுழைந்தபோதும் அந்தப் பெண் அங்கே உட்கார்ந்திருந்ததாக நினைவிருந்தது வல்லாளதேவனுக்கு அவளைக் கேட்டால் சேந்தன் எங்கே போனான் என்ற விவரம் தெரியலாம் என்று நினைத்தான்.

அந்தப் பூக்காரப் பெண் நல்ல அழகியாகக் காட்சியளித்தாள். அந்த நிலையில் மலர்க் குவியல் களுக்கிடையே அவளை எவனாவது ஒரு கவிஞன் பார்த்திருந்தால், “மலர்களுக்கிடையே-சாதாரணமான வெறும் மலர்களுக்கு இடையே-இளமையும், மோகமும், செறிந்த புதிய பெருமலர் ஒன்று பூத்துப் பொலிவுடன் வீற்றிருக்கிறது” என்ற கருத்து அமையும்படி ஒரு கவிதையே இயற்றியிருப்பான். செந்தாழை நிறமும், செங்குமுத இதழும், கருமேகக்கூந்தலுமாகப் பூப்போன்ற கையில் இருவாட்சி பூப்போன்ற விரல்களைக் கொண்டு பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். சண்பக மொட்டுக்களைப் போன்ற அவளுடைய விரல்களில் ஒளிந்து கொண்டிருந்த திறமை உதிரிப் பூக்களை ஊழ்வினையை வரிசைப்படுத்தும் பரம்பொருள் நியதி போல் வரிசைப்படுத்தி வேகமாகவும் நளினத்துடனும் தொடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் தன்னுடைய சொந்தக் கவலைகளையும் மறந்து அந்த விரல்களின் நளினத்தை விரல்களுக்குரியவளின் வனப்பை அனுபவித்து நோக்கினான் தளபதி, பின்பு தன் நினைவு வரப் பெற்றவனாய் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று, “பெண்னே! சிறிது நேரத்துக்குமுன் இந்த மடத்து வாசலில் இரண்டு குதிரைகளும் ஒரு குட்டை மனிதனும் இருந்தார்களே! அவன் குதிரைகளைச் செலுத்திக்கொண்டு எந்தப் பக்கமாகப் போனானென்று உனக்குத் தெரியுமா?” என்று தன்னுடைய