பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பாண்டிப் பேரரசின் அடையாளச் சின்னமாகிய மீனின் உருவமும் நாஞ்சில் நாட்டுக் கலப்பை, மேழி வடிவங்களும் பெரிதாக வரையப்பட்டிருந்தன. திரைக்கு இப்பால் மின்னல் தண்டுபோல் ஒளி வீசும் உருவிய வாள்களுடன் இரண்டு யவன வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். அடல் வாள் யவனர்’ என்ற சங்கத் தமிழ் நூல்களின் வர்ணனைக்கு ஏற்பக் கருமெழுகில் பிடித்துப் பிடித்து உருவாக்கிய இரண்டு பயங்கரச் சிலைகள் நிற்பதுபோல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருந்தனர் அந்த யவன நாட்டுக்காவல் வீரர்கள்.

“ஏன் இதற்குமேல் போகக்கூடாது என்கிறாய்? போனால் என்னவாகிவிடும்?” என்று கேட்டார் துறவி.

“நான்தான் முன்னமேயே சொன்னேனே! இந்த மாளிகையில் என் தந்தையாரின் விருப்பத்துக்கு இணங்கத்தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளவேண்டும். அவருடைய உத்திரவை மீறினால் அவருக்குக் கோபம் வந்துவிடும். என்ன செய்வார் என்றே சொல்லமுடியாது.”

“யாரும் பார்க்கக்கூடாத அறைகளில் இதுவும் ஒன்றோ?”

“ஆமாம்!”

“அப்படியானால் சரி! இதற்குமேல் நாம் போகவேண்டாம். உன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் திரைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாமோ?-துறவி கேட்டார்.

குழல்மொழி கொற்கைத்துறை ஒளி முத்துக்களைப் போன்ற தன் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்தாள். “அடிகளே! நீங்கள் பெரிய தந்திரக்காரர். அந்த இடத்துக்கே போகக்கூடாதென்று நான் சொல்கிறேன். நீங்களோ அங்கே என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்கள்? கெட்டிக்கார மனிதர்தாம் நீங்கள்.”

“சொல்லாவிட்டால் போயேன். நான் ஆருடத்தால் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டால் அப்போது என்ன செய்வாய்? இதோ கண்டுபிடித்து விடுகிறேன் பார்!” சொல்லி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறவர்போல் பாவனை செய்தார்.