பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மனித உருவமும் மெதுவாக வெளியேறி மேட்டுக்கு வந்தன. அந்த உருவமே நாராயணன் சேந்தன்.

அப்போதும் அந்தப் பூக்காரப் பெண்ணுடன் அவள் தந்தையும் அங்கே தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்? எந்த ஒர் அழகிய பெண்ணைப் பிறவிச் செவிடு என்றும். பிறவி ஊமை என்றும் தளபதி எண்ணி, படைத்தவன் கைகளைத் தூற்றிக்கொண்டு போனானோ, அந்தப் பெண் இப்போது நாராயணன் சேந்தனிடம் வாய் திறந்து பேசினாள். “ஐயா! நீங்கள் கூறியபடியே அந்த மனிதரிடம் நடித்து ஏமாற்றி அனுப்பிவிட்டோம். நான் ஊமையாகவே நடித்துவிட்டேன். என் தந்தையும் தமக்கு ஒன்றும் தெரியாதென்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்” என்று குயிலின் இனிமையும் யாழின் நளினமும் செறிந்த குரலில் நாராயணன் சேந்தனிடம் கூறினாள் அந்தப் பூக்காரப் பெண்.

“மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்! உனக்கும் உன் தந்தைக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே தன் இடுப்புக் கச்சையை அவிழ்த்து இரண்டு பொற்காசுகளை அந்தப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தான் நாராயணன் சேந்தன். வட்டமாக இருந்த அந்தக் காசுகளின் ஒருபுறம் மகர மீன் வடிவம், இன்னொரு புறம் யானையின் உருவம் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் பராந்தகனின் இறுதிக் காலத்தில் வெளியிடப்பெற்ற நாணயங்கள் அவை.

காசுகளைக் பெற்றுக்கொண்டு மலர்ந்த முகத்தோடு கை கூப்பி வணங்கினாள் அவள்.

“ஐயா! நீங்கள் அடிக்கடி இந்தப் பக்கம் குதிரையில் வந்து போக வேண்டும்!” உபசாரத்துக்காகச் சொல்லுகிறவனைப் போலக் கிழவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

உடனே நாராயணன் சேந்தன் முகத்தில் குறும்புமிளிரச் சிரித்துக்கொண்டே கிழவனையும் அவன் பெண்ணையும் பார்த்து, “ஆகா! அதற்கென்ன? அடிக்கடி வருவத்ற்குத்