பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பாண்டிமாதேவி / முதல் பாகம்


கிளம்பிய சேந்தனும், புறத்தாய நாட்டு அரண்மனைக்கு வந்து சேர வெகு நேரம் செல்லுமாகையினால் நாம் முந்திக்கொண்டு விடலாம்.

“திரையை அகற்றி விடுங்கள்”-என்று மகா மண்டலேசுவரர் கூறியவுடனே திரைக்குப் பின்னாலிருந்து ஆள் நடந்து செல்லும் அரவம் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் பரபரப்படைந்தார்கள். “பிடி! பிடி ! யாராயிருந்தாலும் ஒடித் தப்பி விடக்கூடாது” என்று அங்கிருந்த காவல் வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார் மகாமண்டலேசுவரர். அங்கு நின்று கொண்டிருந்த மெய்க்காப்பாளர்களும், காவல் வீரர்களும் வாள்களை உருவிக் கொண்டும், கூர்மையான வேல்களை ஓங்கிக் கொண்டும், தட தடவென்று ஒசையுண்டாகும்படித் திரைக்குப்பின்னால் பாய்ந்தோடினர். திரைக்குப் பின்னாலிருந்த பகுதியில் சாளரங்களோ, கதிர்மாடங்களோ, பலகணிகளோ இல்லாததால் பகல் நேரத்திலேயே இருண்டு கிடந்தது. அதன் காரணமாகத் தேடிச் சென்றவர்களே ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டனர். கண்டு பிடிக்க வேண்டிய ஆள் மட்டும் அகப்படவே இல்லை. மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறம் சுவரோரமாக ஒரு படிக்கட்டு, கீழ் நோக்கி இறங்கிச் சென்றது. அது அரண்மனையின் நிலவறைக்குச் செல்லும் பாதை. புறத்தாய நாட்டு அரண்மனையின் பல பகுதிகளில் அமைந்திருந்த நிலவறைகளில் முக்கியமானது அதுதான். போர்க் காலங்களிலும், அரசியல் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் காலத்திலும், அரண்மனையிலுள்ள விலை யுயர்ந்த கலைப்பொருள்கள், சிலைகள் முன்னுள்ள வேந்தர்கள் வழங்கிய நாணயங்கள், உபயோகித்த ஆயுதங்கள், கவசங்கள் - இவற்றையெல்லாம் அந்த நிலவறையில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.

திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் தப்பிச் சென்றிருந்தால் கீழே நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டைத் தவிர வேறெந்த வழியினாலும் தப்பிச் சென்றிருக்க முடியாது. சிலர் நிலவறைக்குள் போகும் வழியிலும் சிறிது தூரம் சென்று