பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாண்டிமாதேவி / முதல் பாகம்


என்னோடு புறப்பட்டு வருகிறேனென்றாள். நான் காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டியிருந்ததனால் அவளை உடன் அழைத்துக்கொண்டு வர முடியாமற் போய்விட்டது. மேற்கிலிருந்து வருகிற பல்லக்கு அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும். கிழக்கேயிருந்து வருகிற பல்லக்கு வல்லாள தேவனின் தங்கை பகவதியினுடையது. நீங்கள் வருவதற்கு முன் நானும் வல்லாளனும் பேசிக் கொண்டிருந்தபோது, தன் தங்கை உங்களைக் காண வரப்போவதாகச் சொன்னான்” என்று அதங்கோட்டாசிரியர் மகாராணி வானவன் மாதேவியிடம் கூறிய அநுமானம் பிழையில்லாமல் இருந்தது.

“மிகவும் நல்லது! தென்பாண்டி நாட்டில் தமிழறிவு பரப்பும் உங்கள் மகளையும், வீரப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் தளபதியின் சகோதரியையும் காணும் பேறு எனக்குக் கிடைத்ததே! அது என்னுடைய பாக்கியம்” என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி வானவன்மாதேவி!

கோவிலுக்கெதிரே கூப்பிடு துாரத்தில் இரண்டு சாலைகளும் ஒன்று கூடுமிடத்தில் பல்லக்குகள் இறக்கி வைக்கப்பட்டன. இரண்டு பெண்களும் கீழே இறங்கி மகாராணிக்கு மரியாதை செய்யும் பாவனையில் அடக்க ஒடுக்கமாக நடந்து வந்தனர். அவர்களில் வலதுபுறமாக நடந்து வருகிறாளே, செந்தாழை மடல் போன்ற நிறமும், சிரிப்பைச் சிறை பிடித்து வைத்திருக்கும் செவ்வாயுமாக அவள்தான் அதங்கோட்டாசிரியரின் மகள் அநங்கவிலாசினி. கொடி துவள்வது போல ஒற்றை நாடியான உடல்; ஒரு முறை பார்த்தால் எவ்வளவு மறதியுள்ளவர்களுக்கும் நன்றாக மனத்தில் பதிந்து விடக்கூடிய எழில் பொலியும் வட்ட மதி முகம், அஞ்சனம் தீட்டிய கரு நெடுங்கண்கள், இப்படித்தான் நடக்கவேண்டுமென்று மாதிரிக்கு நடந்து காட்டுவது போல், மானின் குழைவும் அன்னத்தின் மென்மையும் கலந்த ஒருவகை நடையில் அவள் மெல்ல நடந்து வந்தாள். காலடி பெயர்த்து வைக்கும் போதெல்லாம், இந்தப் பட்டுப் பாதத்தின்