பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

201


செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்றபின் ஒப்புக்கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்த புரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.

இதன்பின் பாண்டிநாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்துபோய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.

திருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விடவேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் இன்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்குக் குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. ‘முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத்