பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத்தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்கர்வது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்! இப்படிப் பலவாறு சிந்தித்தபின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப்பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்துகொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.

சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இ ல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பதுபோல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக்குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவ வேண்டும்?

முன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்துகொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி, பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்ததுபோல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணினைப்போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள்! என்ன வளம்! என்ன அழகு! வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டுக் காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.