பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

203


பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககாலத்தில் ஒரு சிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துக்கள் அவனுக்கு நினைவு வந்தன.

“விதைத்த வித்துக்கள் தண்ணிர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும்போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பார்க்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக்கிடக்கும். கறுப்புநிற அடி மரத்தையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர் அரும்புகள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.”

“ஆகா! இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும்போதே பெண்களின் கண்கள்தானே நினைவுக்கு வருகிறது! உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும் ! அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும்போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ?”

தன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள், எல்லா வற்றையும் நினைத்துப்பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். “சற்றுமுன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன்! எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது? உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ?”

சிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன்