பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

207


போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, “ஏன் என்னைப் பின்தொடருகிறீர்கள்? நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே?” என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.

ஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன்? அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்கவேண்டுமே. அதுகூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.

சேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகம் வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்துகொண்ட விதமும் அவர்களைப்பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.

“வந்தது வரட்டும்! இவர்களிடம் கேள்வி கேட்டுக் கெஞ்சிக்கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்” என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்குமேல் அவர்கள் அவனைப் பின்தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில்