பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

பாண்டிமாதேவி / முதல் பாகம்


வலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக்கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்துவிட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க் முடியும்? சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

அப்போது இருந்தாற்போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவதுபோல் கருப்பாக ஏதோ அசைந்தது.

“நில் அங்கேயே! ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை” என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக்கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற்போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ?' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில், மிக மிக அருகில் கேட்டது.

“யார் அது சிரிப்பது? மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்குநேர் வந்து நிற்கவேண்டும்" பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால்