பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

215


அங்கிருந்து புறப்பட மறுத்தார்.

“அது தான் அங்கிருப்பதை உங்கள் ஆருடத்தினால் சொல்லி விட்டீர்களே ?”

“சொன்னால் மட்டும் போதுமா? எங்களுடைய முன்னோர் சுந்தர முடியையும், வீர வாளையும், நான் ஒரு முறையாவது கண் குளிரக் காணவேண்டாமா?"துறவி உருக்கமான குரலில் அவளைக் கெஞ்சினார்.

“அதென்ன! 'எங்களுடைய முன்னோர்' என்கிறீர்கள்? அடிகளுக்குத் தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை, வேறு பாடொன்றும் தெரியவே தெரியாதோ? நீர்தான் பாண்டிய மரபின் இறுதி வாரிசு போலல்லவா பேசுகிறீர்?” என்று திருப்பிக் கேட்டாள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி.

‘ஏன் ? அப்படி இருக்க முடியாதோ? உனக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இதோ ஒரு கணம் பொறுத்திரு” என்று சொல்லிவிட்டு அங்கே பக்கத்திலிருந்த வேறோர் மண்டபத்தில் நுழைந்து மறைந்தார் அடிகள். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவலோடு அந்த மண்டபத்தின் வாயிலையே பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் குழல்மொழி,

சிறிது நேரம் கழித்து மண்டபத்துக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்தபோது அவள் அப்படியே அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இளவரசன் இராசசிம்ம பாண்டியன் அவள் முன்பு வந்து நின்றான். அவனுடைய கவர்ச்சிகரமான கண்களிலும், சிரிப்புக் குடியிருக்கும் செவ்விதழ்களிலும் குறும்புத் தனம் குமிழியிட்டது. வியப்பும், பயமும், வெட்கமும் ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அந்தப் பெண்ணின் பிறைச்சந்திரனை யொத்த நெற்றியில் சங்கமமாயின.

“நான்தான் துறவி. துறவிதான் நான். இந்த உண்மை உன் தந்தைக்கும் அவருடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன்