பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சேந்தனுக்கும் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே உனக்கு மட்டும் தெரியவிடாமல் மறைத்துக்கொண்டேன் நான். இப்போது நீயும் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. தெரிந்துகொள்” என்றான் இராசசிம்மன்.

துறவியாக வேடம்போட்டு இளவரசராக மாறித் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி நிற்கும் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள் அவள்.

“இப்போதாவது சொல்! எதிர்காலத்தில் யாருடைய தலையில், சூடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் கூடவா தனது முன்னோர் பயன்படுத்திய சுந்தர முடியையும் வீர வாளையும் பார்க்கக் கூடாது?”

“இனி உங்களைத் தடுக்க நான் யார்? அதோ, பயங்கரமான அந்த யவனக் காவல் வீரர்களே இன்னாரென்று தெரிந்துகொண்டவுடன் உருவிய வாளை உறைக்குள்ளே போட்டுக் கொண்டு வணங்கி நிற்கிறார்களே?” என்று அது வரையில் வாய் திறவாமல் இருந்த குழல்மொழி வாய் திறந்து மறுமொழி சொன்னாள்.

“அந்த வாள்களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்; இதோ குறுகுறு வென்று வண்டு சுழல்வது போல் என்னைப் பார்க்கின்றனவே, இந்த வாள்கள் தான் என்னைப் பயமுறுத்துகின்றன” என்று நகைத்துக் கொண்டே அவள் கண்களுக்கு அருகில் சுட்டு விரலை நீட்டிக் காட்டினான் இராசசிம்மன்.

குழல்மொழியின் பொன்னிறக் கன்னங்களில் குங்குமக் கோடுகள் படர்ந்தன. கண்களின் விழித்திரைகளில் இன்ப நிறைவு பொங்கும் உணர்ச்சியின் சாயல்கள் ஒடிமறைந்தன.

“வேடம் மாறியதற்கு ஏற்பப் பேச்சும் மாறுகிறாற் போலிருக்கிறதே? இளவரசர் தலைமறைவாக இருந்த காலத்தில் படித்துக்கொண்ட பேச்சுகள் போலிருக்கின்றன இவையெல்லாம்?” என்றாள் அவள்.

“எல்லாம் அந்த நாளிலிருந்தே உன்னைப் போன்ற பெண்களிடம் படித்துக் கொண்ட பேச்சுத்தானே? பத்துப் பன்னிரண்டு ஆண்களுக்கு முன்னால் மதுரை அரண்மனை