பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

217


நந்தவனத்தில் சிறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்போமே, அப்போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா குழல்மொழி? உங்களுக்கெல்லாம் அப்போது ஏழெட்டு வயதுகூட இருக்காது. பட்டுப் பாவாடை மண்ணில் புரள நீ, தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, இன்னும் இரண்டு மூன்று சிறுமிகள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனை நந்தவனத்துக்குப் பூப்பறிக்க வருவீர்கள். நான் அப்போது பத்துப்பன்னிரண்டு வயதுச் சிறுவன். வாட்போர் கற்றுக்கொண்டிருந்த சமயம் அது வேடிக்கையாக வாளை உருவிச் செடிகளை வெட்டுவேன். உங்கள் பூக் கூடைகளைத் தட்டி விடுவேன். உங்களுக்கு அப்போது எப்படிக் கோபம் வரும்? என்னை என்னென்ன பேச்சுப் பேசுவீர்கள்?" பழைய இளமை நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் ஒருவித ஏக்கம் மிகுந்த குரலில் பேசினான் இராசசிம்மன்.

“ஏ, அப்பா! உங்களுக்குத்தான் எவ்வளவு நினைவாற்றல்? நாங்கள் கூட மறந்து விட்டோம். சிறு வயதில் நடந்தவற்றை யெல்லாம் மறந்துவிடாமல் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்களே?” என்று சொல்லிச் சிரித்தாள் குழல்மொழி. சொல்லி முடித்ததும் அவள் நெஞ்சம் மேலெழுந்து தணிய ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் உள்ளத்திலும் துள்ளித் திரிகின்ற காலமான அந்தப்பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய நினைவு அலைகள், கழிவிரக்கங்கள் எல்லாம் குமுறி எழுந்தன.

“வயது ஆக ஆக மனிதனுக்கு எது தன்னுடைய சொந்தக் கணக்கில் மீதமாகிறது தெரியுமா, குழல்மொழி? பழைய இளமை நினைவுகள் மட்டும்தான். இதோ என்னைப் பார். எத்தனை அரசியல் குழப்பங்கள், வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் வயதான பிறகு என்னைப் பிடித்துக் கொண்டன! தெரிந்தோ, தெரியாமலோ என் வயதையும், பொறுப்பையும் இவை அதிகப்படுத்தி விட்டன. அந்தப் பிள்ளை மனம், அந்த விளையாட்டுத் தனமான குறும்புகள் எல்லாம் இப்போது கல்லாக முற்றி விட்டன.”