பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“சந்தேகமே இல்லை. இவள் ஒரு வீர புருஷனின் தங்கை தான்” என்று பார்த்தவுடனே சொல்லி விடலாம்.

பகவதியும் விலாசினியும், மேகமும் மின்னலும் அருகருகே நடந்து சென்றது போல் சென்று, கோவில் வாசலில் மகாராணியை வணங்கினார்கள்.

“குழந்தைகளே! வாருங்கள் ! உங்கள் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போகாமல் நிற்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நீங்கள் இருவரும் வருகிற செய்தியை அதங்கோட்டாசிரியர் சொன்னார். வாருங்கள்; கோவிலுக்குள் சென்று தரிசனத்தை முடித்துக்கொண்டு வருவோம்” என்று சொல்லி, அந்த இரு பெண்களையும் தன் இருபுறமும் அணைத்தாற் போலக் கைகளால் தழுவிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் மகாராணி.

“ஆசிரியரே! வல்லாள தேவனை ஏன் இன்னும் காணவில்லை; அந்தப் பாறையில் நின்றுகொண்டு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறானோ?” என்று ஆலயத்துக்குள் நுழையும் போது பவழக்கனிவாயர் அதங்கோட்டாசிரியரின் காது அருகே மெல்லக் கேட்டார்.

“வராமல் எங்கே போகப் போகிறான்? அவனுடைய தங்கை வேறு வந்திருக்கிறாள். ஏதாவது முக்கியமான காரியம் இருக்கும்! விரைவில் வந்து விடுவான். நீங்கள் வாருங்கள்; நாம் உள்ளே போகலாம்” என்று ஆசிரியர் அவருக்குச் சமாதானம் கூறினார்.

கடற்கரையோரக் கோவிலாகையினால் மிகவும் தணிவாகக் கட்டப்பட்டிருந்தது. மதிற் சுவர்களில் பலகணிகள் அமையப் பெறவில்லை. உள்ளே வெளிச்சம் வருவதற்காக மேற்புறத்து விதானச் சுவரில் வட்ட வட்டமாக இடைவெளிகள் விடப்பட்டிருந்தன.

காற்று நுழைவதற்கு வசதிகளே இல்லாமலிருந்தும் கடலை ஒட்டி இருந்ததனால் குளிர்ச்சியாக இருந்தது. மகாராணியாரின் விஜயத்தை முன்னிட்டுக் கோவிலுக்குள் விசேஷ தீபாலங்காரங்கள் செய்திருந்த போதிலும் மூலை