பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

221


வீற்றிருந்தவர்கள் நன்றாகத் தெரியாவிட்டாலும் வேளான்தான் அதைச் செலுத்திக் கொண்டு வருகிறான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படகில் இருந்த மற்ற மனிதர்களை இன்னாரென்று குழல் மொழியால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தத் திசையில் பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இராசசிம்மனின் முகத்தில் வியப்பு மலர்வதை அவள் கவனித்தாள்.

“இவ்வளவு அவசரமாக வேளான் யாரைப் படகில் ஏற்றிக்கொண்டு வருகிறான்?” என்று இராசசிம்மனிடமே கேட்டாள் குழல்மொழி.

“ஆம், அவசரம்தான். நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதன் என்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறான். நீ சிறிதுநேரம் இங்கேயே இரு அவனைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மேன் மாடத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டான் இராசசிம்மன். அவன் நின்று பதில் சொல்லாமல் வேகமாகச் செல்வதைக் கண்டு திகைத்துப்போய் நின்றாள் குழல்மொழி.


27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்

நிலவறையிலிருந்து ஆள் தப்பித்துக்கொண்டு மேலே ஒடும் காலடியோசை கேட்டதும் நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போலிருந்தது. அப்படியே இருட்டில் தாவிப் பாய்ந்து ஓடிப் பிடிக்கலாமென்றால் காலடியில் அவனைச் சுற்றிக் கூர்மையான வாள்கள் சிதறிக் கிடந்தன.

அவற்றை மிதியாதபடி பதறாமல் கீழே குனிந்து உட்கார்ந்துகொண்டு கை விரல்களை அறுத்துவிடாமல் சிதறியிருந்த வாள்களை ஒதுக்கி வழி உண்டாக்கிக் கொண்டான். பின்பு தப்பிச் சென்றவனைத் துரத்திக் கொண்டு படியேறி ஓடினான். ஆனால் தப்பித்தவன் போகிற போக்கில் தாழிட்டுக் கொண்டு போயிருப்பதைக் கண்டதும் சேந்தனுக்கு என்ன. செய்வதென்றே தெரியவில்லை.