பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பலங்கொண்ட மட்டும் கதவைத் தன்கைகளால் ஓங்கித் தட்டினான். நீண்ட நேரமாக அப்படித் தட்டிக் கொண்டே இருந்தான். கைகள்தான் வலித்தன. “சரிதான்! வகையாக மாட்டிக் கொண்டுவிட்டேன். இந்த முரட்டுக் கதவை விடிய விடியத் தட்டினாலும் யாருக்குக் கேட்கப் போகிறது? இந்த இருட்டுக் கிடங்கில் பட்டினி கிடந்து சாக வேண்டுமென்று தான் என் தலையில் எழுதியிருக்கிறதோ, என்னவோ?" என்று கதவடியில் கன்னத்தில் கையை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்து விட்டான். காலையில் இடையாற்று மங்கலத்திலிருந்து கோட்டாற்றுக்கும், கோட்டாற்றிலிருந்து தளபதியை அலைக் கழிப்பதற்காகத் திருநந்திக்கரைக்கும் அலைந்து களைத்திருந்த நாராயணன் சேந்தன் உட்கார்ந்தவாறே துரங்கத் தொடங்கி விட்டான்.

மறுபடியும் அவன் கண் விழித்தபோது அவனுக்காகவே திறந்து வைக்கப்பட்டிருந்ததுபோல் நிலவறையின் மேற்கதவு திறந்திருந்தது. கதவுக்கு அப்பால் மந்திராலோசனை மண்டபத்தில் யாரோ பெண்களின் சிரிப்பொலியும் பேச்சொலியும் கேட்டன. அதற்குள் ஒரு குட்டித்துக்கம் துரங்கி முடித்திருந்த சேந்தன் மேலே எழுந்துவந்தான். யார் கதவைத் திறந்து வைத்திருக்கக்கூடும்?’ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. 'தான் கைவலிக்கத் தட்டியபோது ஒருவரும் திறக்கவில்லை. அலுப்பினால் கண் அயர்ந்து விட்டபோது யாரோ பூனைபோல் மெல்ல வந்து கதவைத் திறந்திருக்கிறார்கள். திறந்ததுதான் திறந்தார்கள். ஆனால் கீழே கதவருகில் உட்கார்ந்துகொண்டிருந்த என்னைக் கவனிக்கவில்லையே!' என்று அவன் நினைத்தான்.

உள்ளிருந்து வெளியேறி மேலே வந்தபின் கதவை முன் போலவே அடைத்துத் தாழிட்டுவிட்டு மந்திராலோசனை மண்டபத்தில் கும்மாளமடிக்கும் அந்தப் பெண்கள் யார் என்று பார்க்க வந்தான்.