பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

223


தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, மகாராணியாரின் உடன் கூட்டத் தோழிகளைச் சேர்ந்த இன்னும் இரண்டு மூன்று பெண்கள்-எல்லோரும் அங்கு உட்கார்ந்து சொக்காட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சதுரங்க விளையாட்டினிடையே இலக்கியச் சர்ச்சையும் நடந்து கொண்டிருந்தது.

“ஏண்டி, விலாசினி? தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரா? அல்லது அதங்கோட்டாசிரியரின் மாணவரா?” என்று கேட்டாள் பகவதி.

“சதுரங்க விளையாட்டினிடையே இந்தச் சந்தேகம் உனக்கு எங்கிருந்து முளைத்தது!...” விலாசினி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலா நாராயணன் சேந்தன் அங்கே தலையைக் காட்டவேண்டும்?

“ஆ! அதோ, அகத்தியரே நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவரையே நேரில் கேட்டுவிடலாம்” என்று நாராயணன் சேந்தன் குட்டையாயிருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கேலி செய்தாள் ஒருத்தி,

“ஓ! இந்த அகத்தியரா? இவருக்கு உளவறியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாதே. பாவம் இந்த உலகத்தில் எல்லோருடைய உடம்பும் மேல் நோக்கி வளருகின்றன என்றால், இவருடைய உடம்பு மட்டும் கீழ் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது” என்று சேந்தன் காதில் கேட்டுவிடாமல் மெல்லச் சொல்லிச் சிரித்தாள் ஒருத்தி.

“நிலவறைக் கதவைத் திறந்தது நீங்கள்தானா?” என்று கடுமையான குரலில் அவர்களைக் கேட்டான் சேந்தன்.

விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் அந்தப் பெண்கள். அவர்கள் பதில் சொல்லாமலிருந்தது அவனுடைய கடுமையை அதிகப்படுத்தியது.