பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“பெண்களாகச் சேர்ந்துகொண்டு விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறீர்கள். அதனால் பெரிய பெரிய காரியங்கள் கெட்டுப்போய் விடுகின்றன.”

“ஐயா, ஒற்றர் பெருமானே! உமக்குக் கோடி வணக்கங்கள் செலுத்துகிறேன். எங்களிடம் வம்புக்கு வராமல் போய்ச் சேருங்கள். உள்ளே இருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. திறக்கலாமா, வேண்டாமா? என்று நீண்ட நேரம் யோசித்தோம். கடைசியில் நாங்கள் திறந்தபோது யாரும் உள்ளேயிருந்து வெளியில் வரவில்லை. நிலவறைக்குள் எட்டிப் பார்த்ததில் படியருகில் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல் தெரிந்தது. இரண்டு மூன்று முறை யார் யார்? என்று இரைந்து கேட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நிலவறைக்குள் இருட்டாக இருந்ததனால் எங்களுக்குப் பயமாக இருந்தது. பேசாமல் திரும்பி வந்து விட்டோம்” என்று பகவதி அவனுக்குப் பதில் கூறினாள்.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து சென்றான். அவன் மனத்தில் சந்தேகங்களும் வயிற்றில் பசியும், உடம்பில் அலுப்பும் வளர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே வேறொரு வகைப் பயமும் அவனுக்கு ஏற்பட்டது. "முன்கோபக்காரனும், செல்வாக்கு மிகுந்தவனுமான தளபதி வல்லாளதேவனிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டேனே அதன் விளைவு என்ன ஆகுமோ?” என்று உள்ளுற அஞ்சிக் கொண்டிருந்தான்.

“திருநந்திக்கரையிலிருந்து அரண்மனைக்கு வந்து சேருவதற்குத் தளபதிக்குக் குதிரை கிடைக்கப் போவதில்லை. தளபதி கோட்டாறிலுள்ள படைச்சாலைக்குச் சொல்லி அனுப்பிக் குதிரை வரவழைக்க வேண்டும், அல்லது கடல் துறையிலிருந்து மிளகுப் பொதி ஏற்றிவிட்டுத் திரும்பும் வணிகப் பெருமக்களின் வாகனங்களில் ஏதாவதொன்றில் இடம்பிடித்து வரவேண்டும். இந்த இரண்டு வழியுமே சாத்தியப்படாவிட்டால் இன்றிரவிற்குள் இங்கே வந்து சேரமுடியாது.” இந்த ஒரே ஒரு சமாதானம் தான் சேந்தனுக்குத் தற்காலிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.