பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

225


‘இன்னும் கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்குள் எங்கே முடிந்திருக்கப் போகிறது?' என்ற எண்ணத்தினால் மகாமண்டலேசுவரர் பட்டி மண்டபத்தில் தான் இருப்பாரென்று கருதிக்கொண்டு அங்கே சென்றான். ஆனால் பட்டிமண்டபத்தில் யாருமில்லை. கூட்டமும் முடிந்து அவரவர்கள் தங்கும் இடங்களுக்குப் போயிருந்தார்கள். சேந்தனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

பட்டி மண்டபத்திலிருந்து அவன் திரும்பியபோது பின்புறம் தோள்பட்டையின் வலதுபுறம் ஒரு கை அழுத்தித் தொட்டது. நாராயணன் சேந்தன் அலறிவிட இருந்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பயத்தை அடக்கியவனாகத் திரும்பிப் பார்த்தான். பட்டி மண்டபத்துத் துரண் ஒன்றின் மறைவிலிருந்து ஆபத்துதவிகள் படையணியின் தலைவனான மகரநெடுங்குழைக் காதன், சேந்தனுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் அப்போதிருந்த நிலையைப் பார்த்தபோது சேந்தனுக்கு வியப்பு மட்டும் ஏற்படவில்லை. பயம்தான் அதிகமாக ஏற்பட்டது. மகரநெடுங்குழைக்காதனின் கண்கள் நெருப்புத் துண்டங்களைப் போலச் சிவந்திருந்தன. அங்கியும், மேலாடையும் அங்கங்கே துளசியும் அழுக்கும் பட்டுக் கிழிந்திருந்தன. முகத்திலும் கைகால்களிலும் சிராய்த்து இரத்தக்கசிவு தெரிந்தது. அந்த நிலையில் நாராயணன் சேந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிக்க வேண்டுமென்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தது போலிருந்தது. பயங்கரமாகவும் இருந்தது அந்தச் சிரிப்பு.

“என்ன ஐயா? இங்கே பட்டி மண்டபத்துத் தூண்மறைவில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்?” என்று கேட்டான் சேந்தன். குழைக்காதன் சேந்தனுக்குப் பதில் சொல்லாமல் அவன் முக்ததை உற்றுப் பார்த்து, மெல்லச் சிரித்தான். இயற்கையாகச் சிரிக்கின்ற சிரிப்பாக இல்லை அது.

“ஆபத்துதவிகளின் செயல் மட்டும்தான் கடுமையான தென்று இதுவரையில் கேள்விப்ட்டிருந்தேன். அவர்களுடைய பார்வையும், சிரிப்பும் கூட அல்லவா கடுமையான இருக்கின்றன!”

பா. தே.15