பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

227


ஆபத்துதவிகளின் முத்திரைச் சின்னம் பொறித்த ஒரு பட்டுத்துணி. கீழே குனிந்து எடுப்பதற்குமுன் அதைத் தான் எடுப்பதை எங்கிருந்தாவது யாராவது பார்க்கிறார்களா என்று அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கும் போலும்! ஒரு வேளை தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அதைத் தேடி வருவதைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு சுலமாகப் போட்டு வைத்திருக்கலாமோ என்று அவன் பயந்திருக்கவேண்டும்.

அதனால் தான் அவ்வளவு தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு அவன் அதை எடுத்தான். ஆனால் தன்னுடைய நிதானமும் முன்யோசனையும், தன்னை ஏமாற்றி விட்டன என்பதை அந்தத் துணியை எடுத்து வழக்கம்போல் இடுப்பில் அணிந்து, தலை நிமிர்ந்த போது அவன் தெரிந்து கொண்டான்.

மேலேயிருந்து இரண்டு பெரிய குடை மல்லிகைப் பூக்கள் அவனுடைய முன் தலையில் உதிர்ந்து நெற்றியில் நழுவி விழுந்தன. அந்தப்புரத்து நங்கையர்கள் தங்கள் அளக பாரத்திற்குப் பூசும் வாசனைத் தைலத்தின் மணம் அந்தப் பூவின் மணத்தில் விரவியிருந்தது. மகரநெடுங்குழைக்காதன் திடுக்கிட்டு மேலே நிமிர்ந்து பார்த்தான்.

மேலே அந்த இடத்துக்கு நேரே அந்தப்புரத்தின் மாடத்தில் ஒரு பெண் முகம் விறுட்டென்று திரும்பி மறைந்தது. திரும்பும் போது கருநாகம் போன்ற அந்தப் பெண்ணின் சடை சுழன்று அதிலிருந்த மல்லிகைப் பூக்களில் மேலும் சில அவன் மேல் உதிர்ந்தன. இளம் பெண் முகமாகத் தான் தெரிந்தது. திரும்பிய வேகத்தில் அவனால் முகத்தை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு முடியவில்லை. எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு நான்கு புறமும் பார்த்தேன்! மேலே பார்க்கத் தவறி விட்டேனே! என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் மகர நெடுங்குழைக்காதன். சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்றான். கீழே கிடந்த அந்தக் குடை மல்லிகைப் பூக்களை ஒன்றுவிடாமல் பொறுக்கித் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான்.