பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

231


நாட்டுக்காவது சென்று அமைதியாக வாழ்வேன். அதையும் செய்ய விடாமல் உங்கள் அன்பு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மகாமன்னரையும் இழந்து பின் புதல்வனையும் விட்டுவிட்டு நான் மட்டும் இப்படி யாருக்காக இங்கு வாழவேண்டும்? இப்படி நான் வாழ்வது கூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. என்னையே அழித்துவிடுவதற்குக் கூடச் சூழ்ச்சிகள் நடக்கின்றன.”

இப்படி மகாராணி வானவன்மாதேவியார் பேசிக் கொண்டு வரும்போதே, “மகாராணியார் அப்படி அஞ்சக் கூடாது. தென்பாண்டி நாட்டு வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், கைகளில் வலிமையும், வாளில் ஒளியும், இந்த விநாடிவரை குன்றிவிடவில்லை. மகாராணியாரை அழிக்க எந்தத் தீய சக்தியாலும் முடியாது” என்று ஆவேசம் பொங்கும் குரலில் உறுதியாகக் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. அதை ஆமோதிப்பதுபோல் அங்கிருந்த மற்றவர்களும் சிரக்கம்பம் செய்தனர்.

“அது சரிதான்! குமாரபாண்டியர் எங்கேயிருக்கிறார் என்றறிவதற்கு நாமாகவே ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா? இப்படி வாளாவிருந்தால் அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள முடியும்?” என்று மகா மண்டலேசுவரர் பக்கமாகத் திரும்பி ஒரு கேள்வியைக் கேட்டார் சுழற்கால் மாறனார்.

மகாமண்டலேசுவரர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பே, மற்றவர்களும் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

“இளைய சக்கரவர்த்தியை உடனே அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டாமா?” என்று கேட்டார் ஒருவர்.

“மகாராணியாரின் கவலைகள் குறைந்து நிம்மதியும், அமைதியும் உண்டாக வேண்டுமானால் குமாரபாண்டியர் எங்கிருந்தாலும் தேடிக்கொண்டு வந்து முடிசூட்டி விடுவதே முறை” என்றார் மற்றொருவர்.