பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

235



கொண்டார். அவர் அங்கே சேந்தனுக்காகத் தாமதித்துக் கொண்டு நின்றபோது அந்தப் பட்டி மண்டபத்தின் மேலே இருந்த அந்தப்புரத்து மாடத்தில் புவன மோகினி என்ற வண்ண மகளின் உருவம் தெரிந்தது. புவன மோகினி அந்த அரண்மனையில் வண்ண மகளாகப் பணிபுரிபவள். வண்ண மகளின் வேலை அந்தப்புரத்திலும், கன்னி மாடத்திலும் உள்ள அரச குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரம் செய்வதாகும். மற்றவர்களுக்கெல்லாம் அவள் அலங்காரம் செய்து விட்டால்தான் அழகு பிறக்கும். ஆனால் அவளுக்கோ யாரும் அலங்காரம் செய்யாமலே அபூர்வமான அழகும் இளமையும் வாய்த்திருந்தன. உண்மையில் புவன மோகினி என்ற பெயருக்கு அவள் பொருத்தமானவள்தான். பின்னிவிட்ட சடை அசையப் பிறைமதி போல் மல்லிகைச் செண்டு சூடி நடந்தாளானால் பார்க்கிறவர்களின் உள்ளமெல்லாம் பறிபோக வேண்டியதுதான்.

கீழே நின்றுகொண்டிருந்த மகாமண்டலேசுவரர் புவன மோகினியைக் கைதட்டிக் கூப்பிட்டார். மதிப்புக்குரிய மகாமண்டலேசுரருடைய அழைப்புக்குப் பணிந்து கீழே இறங்கி ஓடோடி வந்தாள் புவனமோகினி.

“பெண்ணே! எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். இதோ இந்த ஆசனத்தின் கீழே இந்தப் பட்டுத் துணியைப் போட்டுவிட்டுப் போகிறேன். இன்னும் சிறிது நேரத்துக்குள் இதை எடுத்துச் செல்ல வரும் மனிதனை நீ மேலேயிருந்து கவனித்து வைத்துக்கொள். அப்புறம் வந்து என்னிடம் சொல்” என்று கூறிவிட்டுத் தம் இடுப்பிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்துத் தாம் உட்கார்ந்திருந்த ஆசனத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார் மகா மண்டலேசுவரர், புவன மோகினி அவர் கூறியபடியே செய்ய ஒப்புக் கொண்டு மாடத்தில் போய் நின்று கீழே கவனித்தாள். இதே சமயத்தில் விலாசினி, பகவதி முதலியவர்கள் மந்திரா லோசனை மண்டபத்துப் பக்கமாகச் சதுரங்கம் விளையாடச் சென்று விட்டதனால் புவனமோகினி அந்தப்புரத்தில் தனியாகவே இருந்தாள். அதனால் அவர் தன்னிடம் ஒப்புவித்துச் சென்றிருந்த உளவறியும் வேலையை அவள் சரியாகச் செய்ய