பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எண்ணி வேளான் வருவதை எதிர்பார்த்து நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரத்தில் வசந்த மண்டபத்திலிருந்து மாளிகைக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் வேளான் வருவது தெரிந்தது. அவன் தான் நின்று கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து சேருகிறவரை ஆவலை அடக்கிக் கொள்ளும் பொறுமை கூட அவளுக்கு இல்லை. மான் துள்ளி ஓடுவதுபோல வேகமாக ஓடிச் சென்று அவனை, எதிர்கொண்டு “வேளான்! வந்திருப்பவர்கள் யார்? எதற்காக இவ்வளவு அவசரமாய் அடிகளைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்?” என்று அவனை நடுவழியிலேயே மறித்துக்கொண்டு கேட்டாள். வேளான் சிறிது தயங்கி நின்றுவிட்டுப் பின்பு கூறலானான். “அம்மா! அவர்கள் இன்னாரென்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அக்கரையிலிருந்து வசந்த மண்டபம் வரை என்னுடன் வந்தார்கள் என்று பெயரே ஒழிய, என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'இந்தத் தீவில் மகாமண்டலேசுவரரின் விருந்தினராக ஒரு துறவி வந்து தங்கியிருக்கிறாரே; அவரை நாங்கள் சந்திக்கவேண்டும்' என்று சுருக்கமாக என்னிடம் கேட்டார்கள். ஆனால் வந்திருப்பவர்களுடைய பேச்சையும், நடையுடை பாவனைகளையும் கூர்ந்து கவனித்தால் நம்முடைய முத்தமிழ் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவர்களாகத் தெரியவே இல்லை. துறவிக்கு அவர்கள் மிகவும் வேண்டிய வர்கள் போலிருக்கிறது. எல்லோருடனும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஏதோ இரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். வேறு யாரையும் தப்பித் தவறிக்கூட அந்தப் பக்கம் விட்டுவிடக்கூடாதென்று எனக்குக் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்.”

வேளானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குழல் மொழி,"என்னைக்கூடவா உள்ளே விடக்கூடாதென்று உத்தரவு?” என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கேட்டாள். “ஆம்! உங்களையும்தான் விடக்கூடாதென்றிருக்கிறார்” என்று வேளான் பதில் சொல்லியதும், அவளுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்தமாதிரி இருந்தது. ஏதோ விளையாட்டுத்தனமாகக் கேட்டாளேயன்றி அந்தப் புதிலை எதிர்பார்த்துக் கேட்கவில்லை.