பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

239



அந்தப் பதிலை அவனிடமிருந்து கேட்டதும் அவள் கண்களில் சினம்கொண்ட சாயல் ஒளிர்ந்தது. புருவங்கள் நெளிந்து வளைந்தன. “பரவாயில்லையே! அடிகளுக்கு வந்து ஒருநாள் கழிவதற்குள் இவ்வளவு அதிகாரம் செய்யும் உரிமை வந்துவிட்டதா?" என்று வெடுக்கென்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் அவள். அவ்வளவு கோபத்திலும் இராசசிம்மன் தான் அடிகளாக நடிக்கிறான் என்ற உண்மையைப் படகோட்டியிடம் கூறத் துணிவுவரவில்லை அவளுக்கு. 'நான் கூட வரக்கூடாதாமே? அப்படி என்னதான் இரகசியம் பேசுகிறார்களோ? வரட்டும்; சொல்கிறேன்' என்று இராசசிம்மன்மேல் ஊடலும், பொய்க்கோபமும் கொண்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டாள் குழல்மொழி. இராசசிம்மன் வசந்த மண்டபத்துக்கு வரக்கூடாதென்று சொல்லிவிட்டதனால் இடையாற்று மங்கலம் அரண்மனை போவதற்கு இடமோ பேசுவதற்குத் தோழிகளோ, இல்லாமல் போய்விட்டார்கள் அவளுக்கு!

அதன்பின் அன்று அவள் வசந்த மண்டபத்துப் பக்கம் வரவேயில்லை. துறவியும் அவரைச் சந்திக்க வந்திருந்தவர் களும்கூட வசந்த மண்டபத்தைவிட்டு வெளியேறவில்லை. படகோட்டி அம்பலவன் வேளான் யாரையும் உள்ளே விட்டுவிடாமல் பாதுகாப்பாக வசந்த மண்டபத்துப் பாதை தொடங்கும் இடத்தில் காவலுக்கு உட்கார்ந்து கொண்டான்.

இருட்டியதும் வழக்கமாகத் துறவியை உணவுக்கு அழைத்துக் கொண்டு போக வருவாள் குழல்மொழி. அன்று அதற்காகவும் அவள் வரவில்லை. “நீ போய் அவர்களைச் சாப்பிட அழைத்துக்கொண்டுவா!” என்று ஒரு தோழியை வசந்த மண்டபத்துக்கு அனுப்பினாள். அந்தத் தோழி அடிகளைத் தேடிக் கொண்டு வசந்த மண்டபத்துக்குச் செல்லும்போது இருட்டி நான்கைந்து நாழிகைகள் ஆகியிருக்கும். துறவியும் அவரைத் தேடிப் புதிதாக வந்திருப்பவர்களும் கூடியிருப்பதால் தீபாலங்காரங்களினால் ஒளி மயமாகவும், பலருடைய பேச்சுக்குரல்களால் கலகலப்பாகவும். இருக்குமென்று நினைத்துக்கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்த தோழி