பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

241


இரவின் நாழிகைகள் ஒவ்வொன்றாக வளர்ந்து கொண்டிருந்தன. நடுச்சாமத்தை எட்டிப்பிடித்து விட்டபோது, வானமும், நட்சத்திரங்களும் சோகை பிடித்த மாதிரி வெளுத்து ஒளி மங்கிக்கொண்டு வந்தன. மாளிகையில் அங்கங்கே அவசியமான இடங்களில் காவல் வைக்கப்பட்டிருந்த வீரர்களெல்லாம் கூடச் சோர்ந்து கண் மயங்கும் நேரம் அது.

அந்த நேரத்தில் வசந்த மண்டபத்தின் பின்புறத்துத் தோட்டத்திலிருந்து அடிகளும், மற்ற மூவரும் புறப்பட்டனர். மாளிகையின் பிரதான வாசலில் கொண்டுபோய் விடும் ஒற்றையடிப் பாதையில் வந்து படகோட்டியின் குடிசையருகே தயங்கி நின்றனர். அன்று குளிர் அதிகமாக இருந்ததனால் படகோட்டி அம்பலவன் வேளான் குடிசைக்குள்ளேயே படுத்திருந்தான்.

வசந்த மண்டபத்திலிருந்து வந்து நின்றவர்களில் ஒருவன் படகோட்டியின் குடிசைக் கதவருகே வந்தான். ஓசைப்படாமல் கதவை வெளிப்பக்கமாக இழுத்துத் தாழிட்டான்.

"அட! படகை அவிழ்த்து வைத்துக்கொண்டு புறப்படுவதற்குத் தயாராக நீ துறையிலேயே இரு. நாங்கள் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்” என்று மற்றவர்கள் அவனைத்துறையில் இருக்கச் செய்து விட்டு மாளிகையை நோக்கி விரைந்தனர். குரல்தான் கேட்டதே ஒழிய இருளில் அவர்கள் முகங்கள் சரியாகத் தெரியவில்லை. அதன் பின் அன்றிரவு நடுச் சாமத்துக்கு மேல் இடையாற்று மங்கலம் மாளிகையில் எந்தப் பகுதியில் என்ன நடந்ததென்று எவருக்கும் தெரியாது.

பொழுது விடிந்தபோது அலறிப் புடைத்துக் கொண்டு குழல்மொழியின் கன்னிமாடத்து வாசலில் வந்து கூக்குரலிட்டனர் யவனக் காவல் வீரர்கள். மாளிகை முழுவதும் கூச்சலும் ஓலமுமாக ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பங்களாலும், கூப்பாடுகளாலும் தூக்கம் கலைந்த குழல் மொழி எழுந்திருந்தவுடன் அந்த யவனக் காவல் வீரர்களின் முகத்தில்தான் விழித்தாள். அவர்கள் ஒன்றும் விளக்கிச்

பா.தே.16