பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

பாண்டிமாதேவி / முதல் பாகம்


ஒளியில் ஆபத்துதவிகள் தலைவனின் முகத்தைக் கண்டாள் புவன மோகினி. அவள் நெஞ்சு 'படக் படக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. வலிமை பொருந்திய அவனது இரும்புக் கை அவள் வாய்க்குக் கவசம் போட்டுப் பூட்டியது போல் அழுத்திப் பொத்திக் கொண்டிருந்தது. ஆபத்துதவிகள் தலைவனின் மற்றொரு கை அவள் கழுத்துக்கு நேர் உயரப் பாம்பு நெளிவது போன்ற சிறு குத்துவாள் ஒன்றை ஓங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்தச் சமயத்தில் எதிர்ச் சுவரில் தெரிந்த அவன் நிழல்கூடப் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே கழிந்தது. அவள் கழுத்துக்கு நேரே ஓங்கியிருந்த கத்தியாலேயே விளக்கின் திரியை நசுக்கி அணைத்தான் அவன். சுடர் நாற்றமும், திரி கருகிய புகையும் மூச்சில் கலந்து நெஞ்சைக் குமட்டின. விளக்கு அணைந்து இருள் பரவியவுடன் புவனமோகினியின் பயம் அதிகமாயிற்று. பலங்கொண்ட மட்டும் அவன் கையைப் பிடித்துத் தள்ளித் திமிறி எழுந்து மீண்டும் கூச்சலிட்டாள் அவள். இருட்டில் அவன் ஓடிவிட்டான்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு விளக்குகளோடும் தீப்பந்தங்களோடும், அந்தப்புரத்துப் பெண்களும், காவல் வீரர்களும் அங்கு ஓடி வந்தபோது யாரும் வந்துபோன சுவடே தெரியவில்லை. அவ்வளவு விரைவில் வந்த ஆள் தப்பி விட்டான். புவனமோகினி கூறியதை அவர்களில் எவருமே நம்பத் தயாராயில்லை. “அடி, பைத்தியக்காரப் பெண்ணே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? உன் கூச்சலால் அந்தப்புரத்தையே அதிரச் செய்து விட்டாயே! என்னதான் பயங்கரமாகச் சொப்பனம் கண்டாலும் இப்படியா கூச்சல் போடுவார்கள்?“ என்று வண்ண மகள் புவனமோகினியை விலாசினியும், பகவதியும் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். புவனமோகினி தன் அனுபவம் உண்மை என்பதைக் கடைசிவரை அவர்கள் நம்பும்படி செய்ய முடியவில்லை. அவள் கனவுதான் கண்டிருக்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சாதித்தார்கள் அவர்கள். அதன் பின் அன்றிரவு அவளைச் சுற்றிப் பன்னிரண்டு தோழிப் பெண்களைப் பக்கத்துக்கு மூன்று பேர்கள் வீதம் நான்கு பக்கமும் துணைக்கு காவலாகப்