பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

247



தேடிக்கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார் மகாராணியார்.

“மகாராணியார் என்னை மன்னிக்கவேண்டும். ஓர் இரகசியத்தை இந்தக்கணம் வரை உங்களிடம் சொல்லாமலே மறைத்து வந்திருக்கிறேன். குமாரபாண்டியர் சில நாட்களாக என் விருந்தினராக இடையாற்று மங்கலம் வசந்த மண்டபத்தில்தான் தங்கியிருக்கிறார். இப்போதே சென்று இங்கு அழைத்துவரச் செய்கிறேன்.”

"உண்மையாகவா?" மகாராணியின் குரலில் அவநம்பிக்கையும், வியப்பும் போட்டியிட்டன. தளபதி வல்லாளதேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் உணர்வுச் சாயைகள் கோடிட்டன. அன்று இடையாற்று மங்கலத்து நிலவறையில் அந்தத் துறவியைப் பார்த்துக் குமாரபாண்டியரோ எனத் தான் அடைந்த பிரமை அவனுக்கு நினைவு வந்தது. துரதன் திகைத்துப்போய் நின்றான். “உண்மைதான்! சில நாட்களுக்கு முன்புதான் கடல் கடந்த நாட்டிலிருந்து இளவரசரை இரகசியமாக இங்கு வரவழைத்தேன். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக அவரை மாறுவேடத்திலேயே விழிஞம் துறைமுகத்திலிருந்து இரவோடிரவாக அழைத்துச் சென்றேன். இடையாற்று மங்கலத்தில் இப்போதும் இளவரசர் துறவிபோல் மாறுவேடத்திலேயே தங்கியிருக்கிறார். ஒரு சில முக்கியமான அரசியல் காரணங்களுக்காக இளவரசர் வரவைத் தங்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் எவ்வளவு முன்னேற்பாடாகவும், பரம இரகசியமாகவும் இதை மறைத்தேனோ, அவ்வளவு எதிர்பாராதவிமாக, சிலருக்குக் குறிப்பாக இந்த இரகசியம் புரிந்துவிட்டது” என்று கூறிக் கொண்டே சிரித்துவிட்டுத் தளபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். ஏற்கெனவே அவர் மேல் சிறிது மனக்கசப்போடு இருந்த தளபதி, “மற்றவர்களுக்கும் சாமர்த்தியம், அறிவு, சூழ்ச்சித் திறன் எல்லாம் இருக்க முடியும் என்பதைச் சில சமயங்களில் தாங்களும் தங்களுடைய அந்தரங்க ஒற்றனும் மறந்து விடுகிறீர்கள்” என்று குத்தலாக அவருக்குப் பதில் சொன்னான்.