பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23


மகாராணியின் கையைப் பிடித்துக்கொண்டே நடந்த பகவதி மேலே பராக்குப் பார்த்தவாறே சென்றாள். விலாசினி தரையைப் பார்த்துக் கொண்டே குனிந்து சென்றாள். அவர்கள் இருவருக்கும் நடுவே தியானத்தினால் குவிந்த கண்ணிமைகளுடனே பரவசத்தோடு மெல்ல நடந்து கொண்டிருந்தார் மகாராணி வானவன் மாதேவி.

பிரகாரத்தின் கிழக்கு மூலையும் வடக்கு மூலையும் சந்திக்கிற திருப்பத்தை நெருங்கியபோது மேலே பார்த்துக் கொண்டே வந்த பகவதி வீல் என்று பயங்கரமாக அலறினாள் : முன்னால் நடந்து கொண்டிருந்த மகாராணியாரையும் விலாசினியையும் குபிரென்று பாய்ந்து நாலைந்தடி பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளினாள் அவள். தள்ளிய வேகத்தில் அவர்களைப் போலவே தானும் நிலை குலைந்து கல் தளத்தில் விழுந்தாள். “என்ன? ஏன் இப்படிச் செய்தாய்?” என்று மகாராணியும், விலாசின்ரியும் இரைந்த குரலில் கத்தினார்கள். ஆனால் அவர்களுக்குப் பகவதி பதில் சொல்வதற்கு முன்பே அதன் காரணம் கண் காணத் தெரிந்து விட்டது.

பிரகாரத் திருப்பத்தின் மேற்புறத்துத் துவாரத்தில் கூர்மையான பெரிய வேல் நுனி ஒன்றும் அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் வலிமை வாய்ந்த முரட்டுக் கையும் தெரிந்தன. மறுகணம் படீர் என்ற ஓசையோடு அந்த வேல் கல்தளத்தில் விழுந்து முனை மழுங்கியது.

அவர்கள் தொடர்ந்து சென்றிருந்தால் மூவரில் நடு நாயமாக நடந்த மகாராணியாரின் மேல் பாய்ந்திருக்க வேண்டிய வேல் அது. வேல் கல்தளத்தில் விழுந்த ஒசை அடங்குவதற்குள் மேலே விதானத்தில் யாரோ ஆள் ஒடும் ஒசை திடுதிடுவென்று கேட்டது.

அதற்குள் பகவதியின் அலறலையும் கல்லில் வேல் விழுந்ததனால் உண்டான ஓசையையும் கேட்டு முன் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அதங்கோட்டாசிரியர்