பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

253

சென்று ஒளிந்துகொண்டு வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவளித்து உதவி செய்தது இலங்கைப் பேரரசே, அவன் மனச் சோர்வோடு கடல் கடந்து சென்றபோதெல்லாம் வரவேற்று ஆதரவளித்தவர்கள் சக்கசேனாபதியும், காசிபனும்தான். தென்பாண்டி நாட்டு இளவரசன் தன் அரசியல் வாழ்க்கையின் துன்பம் நிறைந்த சூழலில் கழித்த சந்தர்ப்பங்கள் கணக்கற்றவை. வளமான கடற்கரை, அழகான மலைத்தொடர், இளமரக் காடுகள், குளிர்பொழிற் சோலைகள், அத்தனையும் நிறைந்த ஈழ நாட்டின் சூழலில் சொந்தத் துயரங்களை மறந்துவிடுவான் இராசசிம்மன். அனுராதபுரத்துக் கற்கனவுகளைக் காணும் போதெல்லாம் சோர்வும் ஏமாற்றமும் நிறைந்த அவன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் திடம்வாய்ந்த எண்ணங்களும், நம்பிக்கைகளும் முகிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் துன்பங்களைத் தமிழ் நாட்டிலும் அவைகளை மறக்கும் இன்பங்களை ஈழநாட்டிலும் அனுபவித்தான் இராசசிம்மன்.

இப்போதும் ஈழநாட்டின் படைத் தலைவர் இந்த மரக் கலத்தில் அவனை அங்கேதான் அழைத்துக்கொண்டு போகிறார். இடைவழியில் சிறிது தங்கிச் செல்வதற்காக அந்தத் தீவில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

சக்கசேனாபதியும், இராசசிம்மனும், கரையில் இறங்கி நின்று பேசிக்கொண்டிருந்த நேரத்துக்குள், அந்தக் கப்பலில் அவர்களோடு வந்திருந்த ஆட்கள் தீவின் கரையில் இரத்தினக் கம்பளங்களையும் சித்திரத் துணிகளையும் கொண்டு தங்குவதற்கு ஓர் அழகான கூடாரம் அமைத்துவிட்டார்கள். தென்னைமரக் கூட்டங்களின் இடையே காற்றில் ஆடி அசையும் பசுந் தோகைகளின் கீழே எழும்பி நின்ற அந்தச் சித்திரக்கூடாரம் மண்ணைப் பிளந்துகொண்டு தானே மேலே வந்து தோன்றும் மலர் வீடுபோல் காட்சியளித்தது. அன்றைய இரவு முடிய அங்கே பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் காலை மறுபடியும் கடற்பயணத்தைத் தொடரலாமா என்பது சக்கசேனாபதியின் திட்டம். தங்குவதற்கு அத்தியாவசியமான பொருள்கள் மட்டும் கப்பலிலிருந்து கூடாரத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டன. நீராடி