பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

261

பதில் சொல்லிக்கொண்டே இராசசிம்மன் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றான். அந்தக் கப்பலில் இருப்பது யாராக இருந்தாலும் அப்போது அவர்கள் பார்வையில் தான் படக்கூடாது என்பது அவன் நினைவு. ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை; கப்பலிலிருந்து இறங்கி வந்தவர்கள் அவன் நாலைந்தடி தூரம் நடப்பதற்குள் அவனை நெருங்கி விட்டார்கள்.

இராசசிம்மன் நடையை வேகமாக்கிக் கொண்டு முந்தி விட முயன்றான். அவர்கள் அவனை முந்த விடவில்லை, “இந்தா, ஐயா, கொஞ்சம் நில்!”

அவன் நின்றான்! கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களில் சற்றுப் பருமனான தோற்றத்தையுடைய ஒருவன் அருகில் வந்து இராசசிம்மனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். தன்னோடு வந்த மற்ற இரண்டு பேர்களையும் பார்த்து ஏதோ ஒரு குறிப்புப் படச் சிரித்தான். பின்பு இராசசிம்மனைப் பார்த்துக் கேட்டான். “ஐயா! நீங்கள் யார்?”

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் இராசசிம்மனுடைய உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. “நான் யாரென்றால். நான் நான்தான்!” .

“அது தெரிகிறது! உங்கள் பெயர்?”

“எனக்கு ஒரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் அது உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் என்ன?” இராசசிம்மனுடைய குரலில் கடுமை இருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.

கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களும் அவனுடைய வழியை மறித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல் குறுக்கே நின்றார்கள். அவர்களில் ஒருவன் அவனுடைய கையிலிருந்த அந்த வலம்புரிச் சங்கைப் பார்த்துவிட்டு, “இந்தச் சங்கு உங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்டான்.

அவர்கள் ஏதோ காரணத்துக்காகத் தன்னை வம்பு பேசி வழிமறிக்கிறார்கள் என்பது இராசசிம்மனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தற்காப்பாக உடைவாள் கூட இன்றிப் பழக்கமற்ற புதிய தீவில்