பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

263

மின்னுகிற நேரத்துக்குள் இராசசிம்மனை மேலே மர உச்சிக்குத் தூக்கிக்கொண்டு சென்றதும் அவர்களுக்குத் தெரியாது. இராசசிம்மன் எப்படியோ மாயமாகத் தங்களிடமிருந்து தப்பிவிட்டானே என்று வியந்த அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்த தாழம் புதர்களைக் குடைந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அவனைத் தாழம் புதரில் தேடிக்கொண்டிருந்த அதே சமயத்தில் புன்னை மரத்தின் உச்சிக் கிளையில் வளை குலுங்கும் அழகிய பெண் ஒருத்தியின் இரண்டு கரங்கள் அவனை வலையிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தன.

“ஐயா! கவலைப்படாதீர்கள், எல்லாம் நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நீங்கள் வலையின் குறுக்கே விழுந்து ஓடினர்கள். இல்லையானால் உங்களை நான் காப்பாற்றியிருக்க முடியாது!” என்றாள் அந்தப் பெண்.

மரக் கிளையின் மங்கலான ஒளியில் அவள் முகத்தைப் பார்த்த இராசசிம்மன், “நீயா?” என்று வியப்பு மேலிட்டுக் கூவினான். அவள் தன் சண்பக மொட்டுப் போன்ற விரல்களால் அவன் வாயைப் பொத்தினாள். 'இரையாதீர்கள். கீழே அந்த வேட்டை நாய்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன’ என்று மெல்ல அவன் காதருகே கூறினாள் அவள்.

மரக் கிளையில் உட்கார்ந்து அவனை வலை மூலம் தூக்கிக் காப்பாற்றிய அந்தப் பெண் வேறு யாருமில்லை. அன்று மாலை அவனுக்குச் சங்கு விற்ற பெண்தான் அவள். இரவில் கரைக்கு வரும் முதலைகளைப் பிடிப்பதற்காக அப்படி வலை விரிப்பது வழக்கமென்றும் அன்று அந்த வலை அவனைக் காப்பாற்ற உதவியதற்காகத் தான் பெருமைப்படுவதாகவும் அந்தப் பெண் அவனிடம் கூறினாள்.

"பெண்ணே ! உன் பெயரை நான் அறிந்து கொள்ளலாமோ?” என்று அவளுடைய வளைக்கரங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு நன்றி சுரக்கத் தழுதழுக்கும் குரலில் கேட்டான் இராசசிம்மன்.

செந்தாமரைப் பூக்கள் போன்ற அந்தப் பெண்ணின் புறங்கைகளைத் தென்பாண்டி நாட்டு இளவரசன் சிந்திய ஆனந்தக் கண்ணிர்த் துளிகள் நனைத்தன.