பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“என் பெயர் மதிவதனி” என்று தலை குனிந்து நாணத்தோடு சொன்னாள் அந்தப் பெண்.

“மதிவதனி, மாலையில் ஈராயிரம் பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு இந்த ஒரு வலம்புரிச் சங்கை எனக்குக் கொடுத்தாய்! இப்போதோ எத்தனை ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்தாலும் ஈடாகாத என் உயிரையே எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறாய்!”

“ஐயா! பொற் கழஞ்சுகளுக்காகவே எல்லாக் காரியங்களையும் மனிதர்கள் செய்து விடுவதில்லை. இதயத்துக்காக-மனிதத் தன்மைக்காகச் செய்து தீரவேண்டிய சில செயல்களும் உலகில் இருக்கின்றன!” மதிவதனியின் குரலில் உருக்கம் நிறைந்திருந்தது.

அவர்கள் புன்னை மரத்தின் அடர்ந்த கிளையிலேயே அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கீழே தாழம் புதர்களில் தேடிக் கொண்டிருந்தவர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்கள்.

“ஐயா! இனி நாம் கீழே இறங்கலாம்” என்றாள் மதிவதனி, இராசசிம்மன் மிரண்ட பார்வையால் அவள் முகத்தைப் பார்த்தான்.

மதிவதனி அவனுடைய பயம் நிறைந்த பார்வையைக் கண்டு சிரித்தாள்.

அதே சமயம் மரத்தடியில், “மதிவதனி.!.மதிவதனி! எங்கேயிருக்கிறாய்? மரக் கிளையிலேயே உறங்கிவிட்டாயா?” என்று கீழே ஒர் ஆண் குரல் இரைந்து கூப்பிட்டது.


33. மகாமண்டலேசுவரர்

இடையாற்று மங்கலத்தில் கொள்ளைபோன செய்தியை அம்பலவன் வேளான் வந்து கூறியபோது எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியோ அதிர்ச்சியை விட அதிகமாக விழிப்பும்