பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

265

முன்னெச்சரிக்கையும் பெற்றார். தாம் பொறுப்பும் திறமையும், சூழ்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு மகாமண்டலேசுவரர்தான் என்பதை அந்த விநாடியில் அவர் செய்த காரியத்தால் நிரூபித்து விட்டார்.

அம்பலவன் வேளான் செய்தியைத் தெரிவித்தபோது அவர்களெல்லாம் எந்த இடத்தில் இருந்தார்களோ அந்த இடத்தின் வெளிவாயிற் கதவுகளை உடனே அடைத்து உட்புறமாகப் பூட்டிக் கொண்டு வருமாறு நாராயணன் சேந்தனை அனுப்பினார் இடையாற்று மங்கலம் நம்பி அவருடைய செயல் எல்லாருக்கும் வியப்பை அளித்தது. சிலருக்கு அர்த்தமற்றதாகவும் பட்டது. சிலருக்குப் பயமாகவும் இருந்தது. நம்பியின் கட்டளைப்படி உடனே கதவைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டான் சேந்தன்.

மகாமண்டலேசுவரர் என்ன சொல்லப்போகிறாரோ என்று எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள். அந்த முகத்திலும், கண்களிலும் ஆழம் காணமுடியாத அமைதி தெரிந்தது.

மகாராணி வானவன்மாதேவி, தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், கரவந்தபுரத்திலிருந்து வந்த துரதன் இடையாற்று மங்கலத்தில் கொள்ளைபோன செய்தியைக் கூறவந்த அம்பலவன் வேளான் முதலிய முக்கியமான ஆட்களே அப்போது அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் நின்று நிதானித்துத் தனித் தனியே ஏறிட்டுப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி, மேலோட்டமாகப் பார்க்கின்ற சாதாரணப்பார்வை அன்று அது! முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம்போல் பெரிய பேச்சுக்களை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால் அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள்தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணிரென்ற குரல் எழுந்தது: “மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்-