பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

267

கொண்டிருந்த தளபதி வல்லாளதேவனுக்குக் கூட அப்போது பேச நா எழவில்லை.

எப்போதும், எவர் முன்னிலையிலும், சிரிப்பும் குறும்புமாகத் தன் பேச்சுக்களால் பாதி-தன் தோற்றத்தால் பாதி என்று நகைச்சுவையலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நாராயணன் சேந்தன் இருக்குமிடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தான். எதிரே இருப்பவர்களின் வாயையும், புலன் உணர்வுகளையும் கட்டிவிடுகிற ஆற்றல் உலகத்தில் மிகச் சிலருடைய கண் பார்வைக்கே உண்டு. அப்படிப்பட்ட கண்களைப் பெற்றவர்கள் வாயில் வீரமொழிகளும், கையில் வாளும் இல்லாமலே கண்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். கண்கள் என்ற ஒரே புலனுணர்வால் மட்டுமே உலகத்தை அளந்து எடை போட்டு நிறுத்திவிடும் மகாசாமர்த்தியக்காரர்கள் அவர்கள். அந்தச் சாமர்த்தியத்தின் சாயல் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரிடம் இருந்தது.

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற”

என்று மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களை நினைத்துத் தான் திருவள்ளுவப் பெருந்தகையார் அழகாகப் பாடிவைத்தார் போலும்.

மழைக்காலத்து மங்கிய நிலவுபோல் மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் கவலைகள் தேங்கி நின்றன. அந்த முகத்தில் ஏற்கனவே நிரந்தரமாகத் தேங்கிவிட்ட கவலை ஒன்று உண்டு. அது கைம்மைக் கவலை. கணவனை இழந்த கவலை. சுட்டுவிரலால் கீறிய கறுப்புக்கோட்டை மேலும் கட்டைவிரலால் கீறிப் பெரிதாக்கினாற்போல் அந்தப் பழைய கவலை புதிய கவலைகளால் விரிவடைந்திருந்தது. ஏதோ ஒரு சோகக்கனவில் ஆழ்ந்திருப்பதுபோல் மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக்கொண்டு வீற்றிருந்த மகாராணியைத் தம் பேச்சுக் குரலால் கவனம் திரும்பும்படி செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.