பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25


உருவி எடுக்கக்கூட அவன் கைகள் அசைய முடியாது அப்படிப்பட்ட நிலை!

முகத்தைத் திருப்பாமல் நின்ற வண்ணமே விழிகளின் இருபக்கத்துப் பார்வையும் பக்கவாட்டில் சாய்த்து நிற்பவர்களைப் பார்க்க முயன்றான் தளபதி. அவன் விழிகள் இரண்டும் காதைத் தொட்டுவிட்டனபோல் நீண்டன. பார்க்காததுபோல் பார்த்த அப் பார்வையிலே ஒரு மிரட்சி இருந்தது.

“தென்பாண்டி நாட்டு வீரத் தளபதியாருக்கு வாள் முனையில் வணக்கம் செலுத்துகிறோம்.”

அவர்கள் குரல்தான். ஏளனமும் மமதையும் தொனித்தன அதில். தளபதி பதில் சொல்லாமல் சிரித்தான். கடைக் கண் பார்வையாலேயே இருபுறம் வாளை நீட்டிக்கொண்டு நின்றவர்களைப் பார்த்துக் கொண்டுவிட்டான். முன்பு தெரிந்த சிவப்புத் தலைப்பாகைப் பேர்வழிகள்தான் இவர்கள். சாமர்த்தியமும் சமயோசித சாதுரியமும் கொண்டு எத்தனையோ சூழ்ச்சிகளைக் கடந்திருக்கும் அவன் மனத்தில் சிந்தனையலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிப் புரண்டன.

தளபதியின் முகத்தில் மின்னி மறையும் சிந்தனை ரேகைகளையும், அவன் சலனமற்று நிற்பதையும் பார்த்து, அவர்கள் மனத்துக்குள் என்ன நினைத்துக் கொண்டார்களோ? தெரிந்து கொள்ள முடியவில்லை.

“தளபதி அவர்களே! தங்கள் இடையிலிருக்கும் வாளை இப்படிக் கழற்றி வைத்து விட்டால் நன்றாயிருக்கும். வீணாக நாங்கள் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்காது” என்றனர்.

வல்லாளதேவன், “ஆகா! அதற்கென்ன? இதோ கழற்றி வைத்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே குபிரென இரண்டடி முன்னால் நகர்ந்துகொண்டு இடையிலிருந்த வாளை உருவினான். அவன் இப்படிச் செய்வானென்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ‘வாளை உருவிக் கீழே