பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. கனவு கலைந்தது

அன்றைக்குப் பொழுது புலர்ந்தபோது இடையாற்று மங்கலம், இடையாற்று மங்கலமாக இல்லை. அந்தத் தீவில் சோகமும், ஏமாற்றமும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து நிரம்பிவிட்டதுபோல் ஒருவகை அமைதி பரவியிருந்தது. மகாமண்டலேசுவரரின் மாளிகை, சாவு நடந்துவிட்ட வீடு போல் களையில்லாமல் காட்சியளித்தது. வைகறையில் அங்கு ஒலிக்கும் வழக்கமான இன்னிசைக்கருவிகளின் மங்கல ஒலி கேட்கவில்லை. மாளிகையிலுள்ள சிவன் கோவிலில் அடிகள்மார் ஊனும், உயிரும் உருகும் வண்ணம் பாடும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் பூபாளப் பண்ணொலி கேட்கவில்லை. மாளிகையைச் சுற்றியிருந்த நந்தவனங்களில் பூத்திருந்த பூக்கள் யாரும் கொய்வாரின்றிக் கிடந்தன.

பெண்களின் கைவளை ஒலி, பாதங்களின் சிலம்பொலி, கதவுகளைத் திறந்து மூடும் மணி ஓசை, முரசுகளின் முழக்கம் சங்குகளின் ஒலி, கன்னி மாடத்துக் குமரி நங்கையரின் குது கலமான கலகலப்பு-எதுவும், எங்கும் இன்று அளவிடமுடியாத துன்பத்துள் அடங்கி ஒடுங்கி முழுகி விட்டது போலிருந்தது தீவு முழுவதும். கன்னிமாடத்து வாசற்படியில் கன்னத்தில் கையூன்றித் துயரமே உருவாக வீற்றிருந்தாள் குழல்மொழி. துரங்கி விழித்த சோர்வு கூட இன்னும் மாறவில்லை அவள் முகத்தில். தூக்கத்தில் கலைந்திருந்த சுரிகுழல் காதோரங்களிலும், முன்நெற்றியிலும் சுருண்டு வளையமிட்டிருந்தது. உறங்கி விழித்த இளஞ்சிவப்புப் படிந்து கண்களின் செருகினாற் போன்ற ஒடுங்கிய பார்வையில் அலுப்பும் ஓர் அழகு மயக்கத்தை உண்டாக்கியது. பகலின் ஒளி மருவி உறவாடிய அந்தித் தாமரை போல் சோகம் மருவித் துவண்ட அந்த முகத்தில் இனம் புரியாத ஏக்கம் தெரிந்தது; அதைவிட அதிகமாக ஏமாற்றம் தெரிந்தது.

புறத்தாய நாட்டு அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போயிருந்த தன் தந்தைக்கு அம்பலவன் வேளான் மூலமாக நடந்த செய்தியைச் சொல்லி அனுப்பிவிட்டு